'வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த காலம் இன்னும் கனியவில்லை'

'வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த காலம் இன்னும் கனியவில்லை'

2 mins read
c1ae7009-ce45-43ef-90c2-344c21c0fb19
வெளிநாட்டு ஊழியர்களிடையே மறுபடியும் கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து உண்மையிலேயே கணிசமாக இருக்கிறது என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லேங் தெரிவித்தார்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் மூன்றாம் கட்ட தளர்வுகளை டிசம்பர் 28 முதல் நடைமுறைப்படுத்துகிறது. இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த இன்னமும் காலம் கனியவில்லை என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லேங் தெரிவித்தார்.

மூன்றாம் கட்ட தளர்வு என்பது கொவிட்-19க்கு முன்பு இருந்த சூழ்நிலைக்குத் திரும்பும் நடைமுறை அல்ல என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மூன்றாம் கட்டத் தளர்வின்படி எட்டு பேர் வரை கூடுவதற்கு அனுமதிக்கப்படும். சுற்றுலாத் தலங்கள், கடைத்தொகுதிகள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான வரம்புகளும் தளர்த்தப்படும்.

இவ்வேளையில், சில அனைத்துலக ஊடகங்களும் அரசு சாரா உள்ளூர் அமைப்புகளும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நடப்பில் வைத்திருப்பது நியாயமற்றதாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் டான் குறிப்பிட்டார்.

இப்படி குரல் கொடுப்பவர்கள் பெரிய பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்ற அமைச்சர், வெளிநாட்டு ஊழியர்களிடையே மறுபடியும் கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து உண்மையிலேயே கணிசமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளில் தங்கியிருப்போரில் 47 விழுக்காட்டினருக்கு ஏற்கெனவே கொவிட்-19 தொற்று ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், அவர்களில் பாதி பேர் இன்னமும் எளிதில் பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்றார்.

வெளிநாட்டு ஊழியர்களிடையே தொற்று ஏற்படக்கூடிய ஆபத்தை கூடுமான வரையில் குறைப்பதற்காக அரசாங்கம் புதிய விடுதிகளைக் கட்டுகிறது. அந்த விடுதிகளில் மேம்பட்ட பாதுகாப்புத் தரங்கள் இருக்கும். வெளிநாட்டு ஊழியர்கள் அவற்றில் சில விடுதிகளுக்கு அக்டோபர் முதல் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

ஊழியர்கள் தங்குவதற்காக முன்பு கட்டப்பட்ட விடுதிகளில் வசிப்போரின் சராசரி விகிதம் ஏப்ரல் முதல் குறைந்து வந்துள்ளது. இது இப்போது சுமார் 60 விழுக்காடாக இருக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக கொவிட்-19 ஊசியும் போடப்படும் என்று குறிப்பிட்ட டாக்டர் டான், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பரிசோதனை, தடமறியும் சாதனங்களின் பயனீடு போன்ற இதர நடவடிக்கைகளிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரவேண்டும் என்றும் யாருக்காவது தொற்று ஏற்பட்டால் உடனடியாக அதைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்திவிட இவை அவசியம் என்றும் விளக்கினார்.

சில விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் சமையல் அறை, உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து விளையாட்டு இடம் போன்ற சமூக வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முடிந்த இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்