வசிப்பிடத்திலேயே தங்கி இருக்கும் கட்டாய உத்தரவின்கீழ் மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் தங்கிய சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்படைந்த 13 பேருக்கு நோய் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய சுகாதார அமைச்சு விசாரணை நடத்துகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த ஹோட்டலில் தங்க புதிய விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை. வசிப்பிடத்திலேயே தங்கி இருக்கும் கட்டாய உத்தரவின்கீழ் தற்போது அங்கு இருப்பவர்கள் உடனடியாக வேறோர் இடத்துக்கு மாற்றப்பட உள்ளனர். அங்கிருக்கும் உணவகமும் நிகழ்ச்சிகள் நடத்தும் அறைகளும் மூடப்படும்.
வசிப்பிடத்திலேயே தங்கி இருக்கும் கட்டாய உத்தரவின்கீழ் மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் தங்கி இருந்த அந்த 13 பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த மாதம் 2ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் பஹ்ரைன், கனடா, இந்தோனீசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருந்தபோதிலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒரே மாதிரி இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.
ஒரே ஆளிடமிருந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா கிருமி பரவியிருக்கக்கூடும் என்று தேசிய பொது சுகாதார ஆய்வுக்கூடம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு இந்த 13 பேருக்கும் மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் கொரோனா கிருமி பரவியிருக்கும் சாத்தியத்தைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
வசிப்பிடத்திலேயே தங்கி இருக்கும் கட்டாய உத்தரவு விதிக்கப்பட்டோருக்காக தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் மற்ற விருந்தினர்களுடன் அவர்கள் தொடர்பில் இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

