சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது முதல் கொவிட்-19 போன்ற ஒரு நிலையைச் சந்தித்ததே கிடையாது.
அந்தக் கிருமி கடந்த ஓராண்டில் படுத்திய பாடும் அது ஏற்படுத்திய பாதிப்புகளும் பல காலம் நீடிக்கும் அளவுக்கு இருக்கிறது. கிருமி ஒழிந்தாலும் அது பொருளியலுக்கும் மக்களுக்கும் மன ரீதியிலும் இதர வகையிலும் ஏற்படுத்திய பாதகங்கள் பல காலம் தொடருமெனக் கணிக்கப்படுகிறது.
இருந்தாலும் அரசாங்கமும் மக்களும் புரிந்துணர்வுடன் அணுக்கமாகச் சேர்ந்து ஒத்துழைத்ததன் விளைவாக சிங்கப்பூர் கொரோனா கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்தி அதைக் கட்டுப்படுத்தி தனது மீள்திறன் கெடாமல் மேம்பட்டு வருகிறது என்பது ஒரு பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சாதனை நிலையில், மேலும் ஒரு சோதனையாக, பயமுறுத்தும் விதமாக புதிய வடிவில் கொவிட்-19 கிருமி தலைதூக்குவதாக உலகம் எங்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு இருப்பதால் கிருமித்தொற்றைவிட அதிக வேகமாக உலகம் எங்கும் மறுபடியும் அச்சம் பரவுகிறது.
லண்டனில் இருந்து அண்மையில் சிங்கப்பூருக்கு வந்த 17 வயது மாணவிக்குப் புதிய வகை கிருமித்தொற்று இருக்கிறது என்பதை சிங்கப்பூர் சில நாட்களுக்கு முன் உறுதிப்படுத்தியது.
இப்படி அச்சம் கூடிவரும் சூழலில், கிருமித் தொற்றுக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்தில் நமக்கு உறுதுணையாக, கவசமாக இருந்து உதவும் என்று நம்பப்படும் தடுப்பூசி இங்கு வந்து தரை இறங்கி இருப்பது கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்து இருக்கிறது.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் சேர்ந்து விநியோகிக்கும் ஃபைசர்-பயோஎன்டெக் என்ற தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் திங்கட்கிழமை சாங்கியில் தரை இறங்கியது. ஆசியாவில் முதன் முதலாக சிங்கப்பூருக்குத்தான் மருந்து வந்துள்ளது. இது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதாகவும் பார்க்கப்படுகிறது.
மருந்து நமக்குக் கிடைத்துள்ள அதே நேரத்தில், இந்த வட்டாரத்தின் இதர பகுதிகளுக்கும் மருந்து சென்று சேர்வதற்கான போக்குவரத்து மையமாக சிங்கப்பூர் திகழ்வது நமக்கு மட்டுமன்றி வட்டார நாடுகளுக்கும் வரவேற்கத்தக்க நல்ல செய்தியாக இருக்கிறது.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் தடுப்பூசி இயக்கம் பிரம்மாண்டமான அளவில் தொடங்கி இருக்கிறது. அந்த ஊசி கொவிட்-19 போரில் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும் என்றாலும் இப்போதைக்கு தடுப்பூசியைவிட்டால் வேறு வழியில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.
கொவிட்-19க்கு எதிரான உலகளாவிய தடுப்பூசி இயக்கம் என்பது இன்றோ நாளையோ முடிந்துவிடக் கூடிய ஒன்று அல்ல. உலகின் மூலைமுடுக்குகளில் எங்கும் உள்ள மக்களை ஊசி சென்று அடைவதற்கு குறைந்தபட்சம் ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்படுகிறது.
கொவிட்-19 தடுப்பு ஊசி மருந்தைப் பெறுவது என்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை. பல நாடுகளும் தடுப்பூசியை விரைவாகப் பெறுவதற்கு இமாலய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பெரிய நாடுகளின் கடும் போட்டிகளுக்கு இடையில் சிங்கப்பூர் வெற்றிகரமாக தடுப்பு ஊசி மருந்தைப் பெற்றுள்ளது. இதற்கு சிங்கப்பூர் அதிகாரிகள் கைக்கொண்டு வரும் செயல்சார்ந்த அணுகுமுறையே காரணம். பல உத்திகளைக் கையாண்டு சிங்கப்பூர் இதைச் சாதித்து இருக்கிறது.
முதலில், வல்லுநர்கள் குழு, கிடைக்கக்கூடிய எல்லா தகவல்களையும் அலசி ஆராய்ந்தது. மிகவும் ஆற்றல்மிக்க மருந்து எது என்பதை அந்தக் குழு பலவற்றையும் மதிப்பிட்டு கண்டுபிடித்தது.
அந்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்த மருந்து நிறுவனங்களை மற்றொரு குழுவினர் அலசினர். சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக் கழகம் பல மருந்து நிறுவனங்களுடன் தொடர்புகொண்டது.
ஒரே ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்து இராமல் பார்த்துக்கொண்டது. அதே நேரத்தில் மிகவும் ஆற்றல்மிக்க, பயனுள்ள மருந்து கிடைத்துவிடும் என்பதயும் சிங்கப்பூர் உறுதிப்படுத்திக்கொண்டது.
சிங்கப்பூர் அடுத்த உத்தியாக $1 பில்லியனுக்கும் அதிக தொகையை ஒதுக்கி தனக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்தது. இவை எல்லாவற்றின் விளைவை எடுத்துக்காட்டுவதாகவே சிங்கபூரில் மருந்து தரை இறங்கி இருக்கிறது.
சிங்கப்பூர் இதுவரையில் ஃபைசர் மருந்தை மட்டும் பயன்பாட்டுக்கு அங்கீகரித்துள்ளது. சினோவாக், மொடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துக்கு இனிதான் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சிங்கப்பூருக்கு முதல் கட்ட மருந்து வந்துள்ள நிலையில், கையில் இருக்கும் மருந்தை மிகவும் விவேகமாகப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும், விநியோகிக்க வேண்டும் என்பதே இதில் அடுத்த கட்ட சவாலாகத் தெரிகிறது.
சிங்கப்பூர் மக்களை எவ்வளவு விரைவாக தடுப்பூசி எட்டும் என்பது பலவற்றையும் பொறுத்தது.
இதர மருந்துகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம், அந்த மருந்துகள் இங்கு எப்போது வரும் முதலான பலவற்றையும் பொறுத்து தேசிய அளவில் தடுப்பு மருந்து போடும் இயக்கம் தொடங்கும். அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டு வாக்கில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது இலக்காக உள்ளது. பல நிலவரங்களைப் பொறுத்து இது முன்பின் ஆக வாய்ப்பு உண்டு.
இருந்தாலும் கொவிட்-19 கிருமிக்கு எதிரான அரணை எப்படி ஏற்படுத்துவது, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துவந்த நிலையில், தடுப்பூசி கைக்குக் கிடைத்து இருப்பதும் அடுத்த ஆண்டில் அனைவருக்கும் ஊசி என்ற இலக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி நமக்கு ஒரு கேடயமாக, கவசமாக இருக்கலாமே தவிர அதுவே முழு வெற்றியை ஈட்டித் தந்துவிடும் என்று நம்புவது விவேகமானதாக இருக்காது. சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து, சுத்தமான பழக்கவழக்கங்களை வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொண்டால் இந்தப் போரில் நமக்கு வெற்றி நிலைக்கும் என்பது திண்ணம்.

