அடுத்த ஆண்டின் மூன்றாம் பருவத்தில் இருந்து மாதத்திற்குக் குறைந்தது இரு நாள் களுக்குப் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடி கல்வி கற்பர். உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இப்புதிய மாற்றத்திற்கு உட்படுவர்.
கொவிட்-19 நோய்ப் பரவல் இருந்தாலும் இல்லாவிடினும் புதிய இயல்புநிலையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய நடைமுறை இடம்பெறும். 2021 இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தனிநபர் கற்றல் கருவி வழங்கப்படும்.
தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பொறுத்தமட்டில், கல்வி அமைச்சு கவனமான அணுகுமுறையைக் கையாளும். சிறு வயது மாணவர்களிடம் கற்றல் கருவிகள் பயன்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறியும் நோக்கில் முதற்கட்டமாக ஐந்து தொடக்கப் பள்ளிகளில் தனிநபர் கற்றல் கருவித் திட்டம் சோதித்துப் பார்க்கப்படும்.
நேற்று நடந்த வருடாந்திர முதல்வர்கள் நியமன, பாராட்டு விழாவில் பங்கேற்ற கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் (படம்) இவற்றை அறிவித்தார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது இடம்பெற்ற முழுநேர இல்லம் சார்ந்த கற்றல் முறை, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, சுறுசுறுப்பானவர்களாகவும் சுயமாக இயங்குபவர்களாகவும் சுயமாகக் கற்பவர்களாகவும் மாணவர்களை மேம்படுத்த வேண்டிய தேவையை வலுவாக்கியது என்று அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
இத்தகைய மனப்போக்குகளை விதைப்பதில் இல்லம் சார்ந்த கற்றல் முறையின் பலன்களை ஆசிரியர்கள் கண்டதாகவும் திரு வோங் சொன்னார்.
"அந்தப் பலன்களைத் தக்கவைப்பது எப்படி என்பதும் புதிய நடைமுறைகளை வழக்கப்படுத்துவது எப்படி என்பதுமே இப்போதைய கேள்வி," என்றார் அவர்.
கைக்கணினி அல்லது மடிக்கணினி வடிவில் வரும் தனிநபர் கற்றல் கருவிகளைப் பெற மாணவர்கள் தங்களது எடுசேவ் கணக்குகளில் உள்ள பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒருமுறை மட்டும் வழங்கப்பட்ட $200 எடுசேவ் நிரப்புத்தொகை மற்றும் வருடாந்திர எடுசேவ் பங்களிப்புகளால் தனிநபர் கற்றல் கருவிகளுக்குச் செலுத்த பெரும்பாலான மாணவர்களின் எடுசேவ் கணக்குகளில் போதுமான பணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கூடுதல் மானியங்கள் வழங்கப்படும் என்பதால், தனிநபர் கற்றல் கருவிகளை வாங்க அவர்கள் தங்களது கையில் இருந்து பணம் போட வேண்டிய தேவை இராது.
இல்லம் சார்ந்த கற்றல் நாள்கள் கட்டாயம் என்பதுடன், அவை புதிய பாடத்திட்டத்தின் ஓர் அங்கமும்கூட.
இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் அந்நாள்களில் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசித்த பிறகு அனுமதி வழங்கப்படும்.
தனிநபர் கற்றல் கருவிகளை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பது தொடர்பான கவலைகளுக்கும் அமைச்சர் வோங் பதிலுரைத்தார்.
அக்கருவிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கவும் மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்காணிக்கவும் ஏதுவாக ஒவ்வொரு கருவியிலும் கருவி நிர்வாக மென்பொருள் நிறுவப்படும்.

