சிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 5 பேருக்குத் தொற்று

சிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 5 பேருக்குத் தொற்று

1 mins read
c718f8b1-5feb-4951-9b2d-0c8374e8eab9
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 31) புதிதாக 30 பேருக்கு கொவிட்-19 பதிவானது. அதில் 5 சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் உறுதிப் படுத்தப்பட்டவை.

மற்ற 25 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று பதிவான சம்பவங்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,599 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட கடல்துறை மேற்பார்வையாளரின் (மெரைன் சர்வேயர்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

மற்ற மூவரும் துறைமுகத்தில் பணியாற்றும் 'ஹார்பர் பைலட்' ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்று பதிவான 5 உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்களும் கடல்துறை சார்ந்தவர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்தத் துறையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மறு ஆய்வு செய்து வருகிறது.

உள்ளூர் சமூகத்தில் இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடல்துறை மேற்பார்வையாளர், துறைமுகத்தில் பணிபுரிபவர் ஆகியோர் பணியாற்றிய கப்பல்களில் பயணம் செய்தவர்களுக்கு சிறப்பு பரிசோதனை நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொள்ள உள்ளது.

"ஹார்பர் பைலட்டுகள், மெரைன் சர்வேயர்கள், கப்பலைப் பழுதுபார்க்கும் ஊழியர்கள் போன்றவர்களுக்கும் வரும் நாட்களில் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது," என அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்