மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமாகும் நிலை ஏற்பட்டால் அதை மட்டுப்படுத்தத் திட்டங்கள் உள்ளன என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி சியா கியன் பெங் கூறியுள்ளார்.

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு வரும் சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்கள் கட்டாயமாக கொரோனா விரைவுப் பரிசோதனைக்கு உட்பட வேண்டியது இன்று காலையில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதனால் மலேசியாவில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலமாக பொருள்கள் விநியோகிக்கப்படுவது தாமதமாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், “இதுவரை எல்லாம் சீராகவே இருந்து வருகிறது. உண்மையில், மலேசிய அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டித்தது முதலே நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்,’ என்றார் திரு சியா.

முதற்கட்டமாக, மலேசியாவில் இருந்து சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்களில் அங்கொருவர் இங்கொருவர் எனப் பரிசோதனை நடத்தப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

“வரும் வாரங்களில், சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்கள், உடன்வருவோர் அனைவருக்கும் ஆன்டிஜென் விரைவுப் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளோம்,” என்று அவர் சொன்னார். சோதனை முடிவுகளில் ‘கொவிட்-19 தொற்று’ இல்லை எனத் தெரியவந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து சரக்கு விநியோகம் தாமதமாகும் பட்சத்தில், அதை எதிர்கொள்ளும் விதமாக சரக்குகளைப் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைத்தல், போதிய அளவிற்குக் கையிருப்பு வைத்திருத்தல் போன்ற திட்டங்கள் உள்ளன என்று திரு சியா குறிப்பிட்டார்.

சாத்தியமுள்ள பிரச்சினைகளை எதிர்பார்த்து, நான்கு மாதங்கள் வரைக்கும் சில வேளைகளில் அதற்கும் அதிக காலத்திற்கும் தேவையான பொருள்களைக் கையிருப்பு வைத்திருப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon