சிங்கப்பூர் சாலைகளில் ஓட்டும் சைக்கிள்களில் 'பிரேக்' கட்டாயம்

சிங்கப்பூர் சாலைகளில் ஓட்டும் சைக்கிள்களில் 'பிரேக்' கட்டாயம்

2 mins read
0f449473-ec86-4a84-a806-bad36de49833
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுப் பாதைகளிலும் சாலைகளிலும் பயன்படுத்தப்படும் சைக்கிள்களில் குறைந்தது ஒரு நிறுத்துகருவியேனும் (ஹேண்ட்பிரேக்) செயல்படும் வகையில் இருப்பது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.

நிறுத்துகருவியைக் கட்டாயமாக்கும் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்திய ஒரு விபத்தைத் தொடர்ந்து நிறுத்துகருவிகள் இல்லாத சைக்கிள்களைப் பயன்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அக்கறைகள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து, உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு முன்வைத்த கட்டாய நிறுத்துகருவி பரிந்துரையை உந்து நடமாட்டச் சமூகத்தினரும் சில்லறை வணிகர்களும் நடையர்களும் வரவேற்று உள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு இன்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

"இவ்விதியை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனைக் குழுவுடன் அணுக்கமாகப் பணியாற்றுவோம். உரிய நேரத்தில் கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்," என்று அமைச்சு கூறியிருக்கிறது.

கட்டாய நிறுத்துகருவி விதி, 'ஃபிக்சீஸ்' என அழைக்கப்படும் நிலைப் பல்சக்கரம் (ஃபிக்சட் கியர்) பொருத்தப்பட்ட சைக்கிள்களைப் பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர். அவ்வகை சைக்கிள்களில் கைகளால் இயக்கக்கூடிய நிறுத்துகருவிகள் இருக்கமாட்டா.

அதேபோல, சாலைகளில் ஓட்டக்கூடிய 'பிஎம்எக்ஸ்' பந்தய சைக்கிள்களைப் பயன்படுத்துவோரும் பாதிக்கப்படுவர்.

பாசிர் ரிஸ்ஸில் உள்ள ஓர் அடுக்குமாடி கார்நிறுத்தப் பூங்காவில் சென்ற ஆண்டு 13 வயது சிறுமி ஒருத்தி, தடுப்புக் கம்பியில் மோதி, மேலிருந்து கீழே விழுந்து இறந்துபோனாள். தன் தோழியின் நிலைப் பல்சக்கர சைக்கிளை சரிவுப்பாதையில் ஓட்டியபோது, அவளால் அதனை நிறுத்த முடியாமல் போனதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நிறுத்துகருவிகள் இல்லாத சைக்கிள்களை ஒழுங்குபடுத்துவது சரியான நேரத்தில் எடுக்கப்படும், தேவையான நடவடிக்கை என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அத்தகைய சைக்கிள்கள் மீதான ஆர்வமும் பயன்பாடும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள டாக்டர் ஏமி கோர், "இந்த நடவடிக்கையைப் பலரும் வரவேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது சாலைகளும் பாதைகளும் பாதுகாப்பானவையாகத் திகழும்," என்றார்.

உந்து நடமாட்டச் சாதனங்களையும் பொதுப் பாதைகளையும் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு மிக முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரில் பாதுகாப்பாக வாகனமோட்டும் சூழலை உருவாக்கி, அதை வளர்ப்பதற்குத் தேவையானவற்றைத் தொடர்ந்து செய்வோம் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்