கொவிட்-19 பரிசோதனைகள் தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறையை உலக நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
எல்லைகளை மீண்டும் திறப்பதற்கும் அனைத்துலகப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கும் இதுபோன்ற பொதுவான நடைமுறை அவசியம் என்று டாவோஸ் உலக பொருளியல் மன்ற மாநாட்டில் ஆற்றிய சிறப்பு உரையில் அவர் தெரிவித்தார்.
கொள்ளை நோயை எதிர்கொள்ள அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகள் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர் வலியுறுத்தினார்.
கொவிட்-19 கொள்ளைநோய் ஏற்படுத்திய நெருக்குதலுக்கு முன்னரே உலகமயமாதல் நெருக்கடிக்குள்ளானதை திரு லீ சுட்டினார்.
"பன்னாட்டு அமைப்புகள், விதிகள், நடைமுறைகள் மீதான நம்பிக்கை ஏற்கெனவே குறைந்திருந்தது. ஜனரஞ்சகமான அரசியல், குறுகிய மனப்பான்மை, தேசியவாதம், தன்னைப்பேணித்தனம் போன்றவை வலுப்பெற்று வந்தன.
நாடுகள் கொவிட்-19 கொள்ளைநோயை முறையாக எதிர்கொள்ள, அனைத்துலக ஒத்துழைப்பு, பன்னாட்டு அமைப்புகளின் முயற்சிகள், அனைத்துலக ஒழுங்குமுறை ஆகியவை முக்கியம். அத்துடன் வல்லரசுகளிடையே நிலையான உறவுமுறையும் இதற்கு அவசியம் என்றார் திரு லீ.
தொற்றுநோய் பரவத் தொடங்கியதும் அனைத்துலக விநியோக சங்கிலிகளை நிலைநிறுத்த நாடுகள், தத்தமது குடிமக்களைத் திரும்பப் பெற, பன்னாட்டுத் தடுப்பூசித் திட்டங்களையும் செயல்படுத்த உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டன.
தடுப்பூசி போடுவது பரவலாகும்போது, நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அதனால் வீழ்ச்சியடைந்த பொருளியல்கள் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என நம்பலாம் என்றார் அவர்.
தொற்றுநோய் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதால், சாத்தியமற்ற வர்த்தகங்கள், வேலைகள் குறித்து அரசாங்கங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
இது, தற்போதுள்ள அழுத்தங்களை அதிகப்படுத்தும். தன்னைப்பேணித்தனம், குறுகிய மனப்பான்மையைக் கொள்ள நாடுகளுக்கு அதிக அழுத்தம் தரும் எனவும் அவர் எச்சரித்தார்.
வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்த, பழைய நிலைக்குத் திரும்புவதற்கு அப்பால், முன்னோக்கிச் சிந்திக்க வேண்டும். நாடுகளுக்குள், புதிய சந்தை வாய்ப்புகளைக் கைக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அரசாங்கங்களும் வர்த்தகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
ஏகப்பட்ட இடர்பாடுகள் உள்ளநிலையில், அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கிடையிலான உறவுகளைச் சீரமைத்துக்கொள்ள காலம் கடந்துவிடவில்லை என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
மேலும் இந்நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், அது ஒரு தலைமுறையின் அழிவுக்கான மோதலாக இருக்கும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கம், இருநாட்டு உறவுமுறையை பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாகும். அமெரிக்க அதிபர் பைடனுக்கு உள்ள பல அவசரப் பணிகளுக்கிடையே அமெரிக்க-சீனா உறவு ஒரு முக்கிய முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

