2021- எஸ்ஜி மாதர் கொண்டாட்ட ஆண்டாக அறிவிப்பு

2021- எஸ்ஜி மாதர் கொண்டாட்ட ஆண்டாக அறிவிப்பு

2 mins read
6eecb6a6-c4a1-49d7-8615-824d3c60e66f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2021ஆம் ஆண்டை எஸ்ஜி மாதர் கொண்டாட்ட ஆண்டாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பிரகடனப்படுத்தும் என்று பிரதமர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரைக் கட்டி உருவாக்குவதில் கடந்த காலத்திலும் இப்போதும் பெண்கள் ஆற்றிவரும் தொண்டுகளை அங்கீகரித்து கொண்டாடுவதோடு சமூகத்தில் பெண்கள் வகிக்கும் மிக முக்கிய பங்குகளையும் இந்த எஸ்ஜி இயக்கம் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குச் சரிசமமான சமூகத்தை உருவாக்குவது தொடர்ந்து இடம்பெறும் முயற்சி என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், வீட்டிலும் வேலையிடத்திலும் சமூகத்திலும் கடந்த பல ஆண்டுகளாக நாம் முன்னேற்றத்தைச் சாதித்து இருக்கிறோம் என்றார்.

இருந்தாலும், மனப்போக்கை மேலும் மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'சிங்கப்பூர் மாதர் மேம்பாட்டுக் கலந்துரையாடல் தொடரின்' நோக்கம் இன்னும் சிறந்த முறையில் மாதர்களுக்கு எப்படி ஆதரவு அளிக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்வதாகும் என்று அவர் தெரிவித்தார்.

பெண்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலை அவர்களிடம் ஏற்படுத்தித் தருவதும் இதன் நோக்கம் என்றாரவர்.

இதனிடையே, இன்று மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அதனையொட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.

தமது அமைச்சு 2021 ஆம் ஆண்டை 'எஸ்ஜி மாதர் கொண்டாட்ட' ஆண்டாகப் பிரகடனப்படுத்தி இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.

"சமூகத்தில் பலவிதமான பொறுப்புகளை மேற்கொண்டு தொண்டாற்றி வரும் மாதர்களை நாம் போற்றி கொண்டாடுவோம். அதோடு, மாதர்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவு அளிக்கும் ஆடவர்களையும் கொண்டாடுவோம்," என அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் பெண்களைப் பாதிக்கக்கூடிய அம்சங்களை மறுபரிசீலனை செய்யப்போவதாக அரசு சென்ற ஆண்டு அறிவித்தது.

அந்த மறுபரிசீலனையின் முக்கிய அங்கமாக கலந்துரையாடல் கூட்டத்தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

'சிங்கப்பூர் மாதர் மேம்பாட்டுக் கலந்துரையாடல்' என்று குறிப்பிடப்படும் அந்தத் தொடர் சென்ற ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது.

அதன் மூலம் திரட்டப்படும் தகவல்கள், யோசனைகள் எல்லாம் ஒரு வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தாக்கல் செய்யப்படும்.

சிங்கப்பூரில் மாதர்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதற்கான பரிந்துரைகள் அந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற்று இருக்கும்.

கலந்துரையாடல் தொடரும் வெள்ளை அறிக்கையும் இங்கு மாதர்கள் மேலும் முன்னேற்றம் காண்பதற்கான தீர்வுகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த உதவும் என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு முழுவதும் 'எஸ்ஜி மாதர் இயக்கத்தின்' அங்கமாக பல கொண்டாட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமைச்சு ஏற்பாடு செய்யும்.

குறிப்புச் சொற்கள்