'வெளியுறவு அமைச்சின் உதவியுடன் மலேசியாவுக்குள் செல்ல 250க்கு மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்பு'

வெளியுறவு அமைச்சின் உதவியுடன் 250க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருணை அடிப்படையிலான காரணங்கள் உட்பட சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த குறிப்பிட்ட பிரிவினர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன் முதியவர்கள், இளம் பிள்ளைகள், நடமாடுவதில் சிரமம் உள்ளவர்கள் என மலேசியாவில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 350க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மீண்டும் சிங்கப்பூர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தம் அமைச்சு உதவியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குடும்பத்தில் உயிரிழப்பு போன்ற முக்கிய குடும்ப விவகாரங்களுக்காக மலேசியாவுக்குள் சிங்கப்பூரர்கள் நுழைய அனுமதி பெறுவதற்காக மலேசிய அரசாங்கத்துடன் சிங்கப்பூர் அரசாங்கம் இணைந்து செயல்படுகிறதா என்று அல்ஜுனிட் குழுத்தொகுதியைச் சேர்ந்த சில்வியா லிம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விவியன் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த ஓராண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லை மூடலால் குடும்பத்தில் பிரிவுகள் ஏற்பட்டதாகவும் சிங்கப்பூரிலுள்ள பல குடும்பங்களிடையே உணர்வுபூர்வமாக ஆழமான பாதிப்புகள் உண்டானதாகவும் அமைச்சர் கூறினார்.

“இறக்கும் தருவாயில் உள்ள குடும்ப உறுப்பினருக்கு அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று குமுறிய மின்னஞ்சல்கள் எண்ணிலடங்கா. இத்தகைய நிலைமையில் சிக்கித் தவிக்கும் சிங்கப்பூரர்கள், மலேசியர்களின் பரிதவிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றார்.

இருப்பினும் பொதுச் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தேவையும் இருந்ததாக அவர் சுட்டினார்.

முக்கிய அல்லது கருணை அடிப்படையிலான காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வதில் இரு நாடுகளுக்குமிடையே கொள்கையளவில் ஓர் ஒப்பந்தம் முடிவாகி வருவதாக டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

பயணம் மேற்கொள்ள விரும்பும் கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விவியன் பகிர்ந்துகொண்டார்.

மலேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநரின் இறுதி முடிவைப் பொறுத்து இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

மலேசியாவின் அரசியல் சூழல், தற்போது நடைமுறையில் உள்ள நெருக்கடி நிலைக்கிடையே இருதரப்பு விவகாரங்களைத் தீர்ப்பதற்கான தூதரக வழிகள் குறித்தும் திருவாட்டி லிம் கேள்வி எழுப்பினார்.

மலேசியாவின் அரசாங்கத்தில் மாற்றம் இருந்தும் கொவிட்-19 நெருக்கடி காலம் முழுவதும் இரு நாட்டு பிரதமர்கள், அமைச்சர்கள், அரசாங்கத் துறைகளுக்கிடையே நல்ல தொடர்பும் உறவும் இருந்து வருவதாக அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!