மின்தூக்கித் தண்டின் குறுகலான இடைவெளியில் சிக்கி தொழில்நுட்பர் மரணம்

2 mins read
0564d75f-7482-48d5-b048-b900c80d7ac2
எண் 452, நார்த் பிரிட்ஜ் ரோடு முகவரியில் இருக்கும் சான் பிரதர்ஸ் கட்டடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து இன்று காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் போலிஸ் தெரிவித்தன. படம்: சாவ் பாவ் -

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் கட்டடம் ஒன்றில் இன்று (பிப்ரவரி 27) பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டிருந்த 30 வயது மின்தூக்கி தொழில்நுட்பர், மின்தூக்கித் தண்டில் சிக்கி உயிரிழந்தார்.

எண் 452, நார்த் பிரிட்ஜ் ரோடு முகவரியில் இருக்கும் சான் பிரதர்ஸ் கட்டடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து இன்று காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் போலிஸ் தெரிவித்தன.

அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளுக்கு இடையில் இருந்த மின்தூக்கியின் 'கேரேஜ்' பகுதி மற்றும் மின்தூக்கியின் உலோக ஆதரவு அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் இருந்த மிகக் குறுகலான இடைவெளியில் அந்த தொழில்நுட்பர் சிக்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து அவரை வெளியே கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் பிடித்ததாகவும் அது மிகவும் சிக்கலான, நுண்ணிய நடவடிக்கையாக இருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குறுகலான அந்த இடத்தில் மீட்பு இயந்திரங்களைப் பயன்படுத்த, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் உன்னத பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு மற்றும் மற்ற தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவக் குழு மட்டுமின்றி டான் டோக் செங் மருத்துவமனையின் அவசர மருத்துவக் குழுவும் சம்பவ இடத்தில் உதவிக்கு விரைந்தன.

அந்தத் தொழில்நுட்பர் உயிரிழந்ததாக இன்று மாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்திலேயே அறிவிக்கப்பட்டது.

இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்த போலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்