இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பு விகிதம் சரிவு

இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பு விகிதம் சரிவு

2 mins read
d047b1ba-8225-4dca-870c-90aa6d3ab2ef
தெம்பனிசில் உள்ள ஜயண்ட் மாபெரும் அங்காடிக்கு மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று சென்றார். படம்: சாவ் பாவ் -

சிங்கப்பூரில் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2020ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு விகிதம் சரிவைச் சந்தித்தது. வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்று மனிதவள அமைச்சு இன்று (மார்ச் 16) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அதே வேளையில், சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய உள்ளூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம், கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் சற்றே மேம்பட்டது.

சிங்கப்பூர் பொருளியலும் வேலைச் சந்தையும் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் இருந்து ஏறுமுகத்தில் இருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அனைத்துலக எல்லைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருப்பது, வேலை ஆதரவுத் திட்டம் போன்ற சம்பள மானியத் திட்டங்கள் முடிவிற்கு வரவிருப்பது உள்ளிட்ட அபாய காரணிகளும் நீடிப்பதாக திருவாட்டி டியோ சொன்னார்.

வேலை ஆதரவுத் திட்டம், வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டமாக மாற்றம் பெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"எவ்வாறாயினும், இத்தகைய திட்டங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றாக மாற்றம் பெற்றாலும் வேலைச் சந்தையில் என்ன நிகழ்கிறது என்பதை நாம் கண்காணித்தாக வேண்டும்," என்றார் அமைச்சர்.

சென்ற ஆண்டில் வெவ்வேறு துறைகளிலும் உள்ளூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்பு விகிதம் ஏற்ற இறக்கமாகக் காணப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

பொது நிர்வாகம், கல்வி, சுகாதாரம், சமூகச் சேவைகள், தகவல் தொடர்பு, நிதி, காப்புறுதிச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள் ஆகிய துறைகளில் உள்ளூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்பு கூடியது.

ஆயினும், பயணக் கட்டுப்பாடுகளால் கடும் பாதிப்பிற்கு உள்ளான விமானத்துறையிலும் சுற்றுப்பயணத் துறையிலும் அவ்விகிதம் பெரிதும் கீழிறங்கியது.

குறிப்புச் சொற்கள்