புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு கொவிட்-19 தடுப்பூசி மையங்களில் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி நாளை (மார்ச் 17) முதல் போடப்படும்.
ஹொங் கா நார்த் சமூக மன்றம், மார்சிலிங் சமூக மன்றம், பொங்கோல் 21 சமூக மன்றம், ராடின் மாஸ் சமூக மன்றம் ஆகியவையே அந்நான்கு மையங்கள்.
மற்ற அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் குறிப்பிட்ட பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி தொடர்ந்து போடப்படும்.
மொடர்னா தடுப்பூசி மேலும் வந்து சேர்ந்தபின் அதிகமான மையங்களில் அந்தத் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
"ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் ஒருவகை தடுப்பூசி மட்டுமே போடப்படும். தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும்போது, இருமுறை தடுப்பூசி போடவும் ஒரே மையத்தைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்," என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எத்தனை பேருக்குத் தடுப்பூசி போட இயலும் என்பதில் ஒவ்வொரு மையமும் வெவ்வேறு கொள்திறனைக் கொண்டுள்ளதால், முதல்முறை தடுப்பூசி போடுவதற்கான காத்திருப்பு நேரமும் மாறுபடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

