சிங்கப்பூரில் சமூக அளவில் புதிதாக இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று (ஏப்ரல் 16) அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த 34 வயது மூத்த ஆய்வாளர் ஒருவர் அவர்களில் அடங்குவார்.
இந்திய நாட்டவரான அவருக்கு கடந்த திங்கட்கிழமை மாலை கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாக அதே நாள் அவர் வேலைக்குச் சென்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் இவ்வாண்டு மார்ச் 21ஆம் தேதி வரை அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். சிங்கப்பூர் திரும்பியவுடன் அவர் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டிருந்தார். தனிமை உத்தரவு முடிந்தவுடன் கடந்த திங்கட்கிழமைதான் அவர் வேலைக்குத் திரும்பினார்.
வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை அவர் நிறைவேற்றி வந்தபோது, கிருமித்தொற்று உறுதியானதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒருவருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரியவந்தது. அவ்விருவரும் ஒரே விமானத்தில் சிங்கப்பூர் வந்தனர்.
மார்ச் 24 முதல் இந்த மாதம் 11ஆம் தேதி வரை அந்த என்யுஎஸ் ஆய்வாளர் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவர் தனிமையில் இருந்தபோது மார்ச் 25, ஏப்ரல் 3, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் அவருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவை மூன்றும் அவருக்குத் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தின.
வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் அந்த என்யுஎஸ் ஆய்வாளர், இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பு அவருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று இல்லை என்று மார்ச் 19ஆம் தேதி உறுதியானது. மார்ச் 21ஆம் தேதி அவர் சிங்கப்பூர் வந்ததுடன் பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் அவருக்குத் தொற்று இல்லை என்று உறுதியானது.
கடந்த திங்கட்கிழமை மாலை அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. அடுத்த நாள் அவருக்குத் தொண்டைவலியும் உடல்வலியும் ஏற்பட்டது. எனவே அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலதுறை மருந்தகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தொற்று உறுதியானதாக அடுத்த நாளான நேற்று தெரியவந்தது. அவசர மருத்துவ வாகனத்தில் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், சமூகத்தில் தொற்று அறிவிக்கப்பட்ட இரண்டாமவர் 44 வயது இந்தோனீசிய ஆடவர். சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் தமது தந்தையைப் பார்க்க அந்த ஆடவர் குறுகியகால வருகை அனுமதிச் சீட்டில் சிங்கப்பூர் வந்தார்.
பிப்ரவரி 28ஆம் தேதி அவர் சிங்கப்பூர் வந்தார். மார்ச் 14ஆம் தேதி வரை வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் அவர் வைக்கப்பட்டார். மார்ச் 13ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கிருமித்தொற்றுப் பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை எனத் தெரிய வந்தது.
இந்தோனீசியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பும் சிங்கப்பூர் வந்தவுடனும் அவருக்கு நடத்தப்பட்ட தொற்றுப் பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரிய வந்தது.
அந்த ஆடவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்தோனீசியாவுக்குத் திரும்பவிருந்த அவருக்கு கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மேற்கூறப்பட்ட இருவர்களின் குடும்பத்தாரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

