சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 17) நண்பகல் நிலவரப்படி சமூக அளவில் நால்வர் உட்பட புதிதாக 39 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இன்று தொற்று அறிவிக்கப்பட்டவர்களில் எஞ்சிய 35 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டனர். அந்த 35 பேரில் 10 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளும் எண்மர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களும் அடங்குவர்.
அண்மையில் சமூக அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பது, கிருமித்தொற்று இன்னமும் ஒழியவில்லை என்பதை நினைவூட்டுவதாக அமைச்சு கூறியது. மக்கள் விழிப்புநிலையைக் கட்டிக்காக்கவில்லை என்றால் சமூகத்தில் புதிய தொற்றுச் சம்பவங்களும் கிருமித்தொற்றுக் குழுமங்களும் எளிதில் உருவெடுக்கக்கூடும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 60,808 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

