பொது மருத்துவமனைகளில் உள்நோயாளி சிகிச்சைக்கான காத்திருப்பு நேரம் அதிகரிப்பு

2 mins read
82073053-84a1-442d-8970-59d9ae8b4add
அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு சிகிச்சை நாடி வந்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெரும்பாலான பொது மருத்துவமனைகளின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சென்ற ஆகஸ்ட் மாதத்தைவிட சென்ற வாரம் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளில் சிலர் படுக்கைக்காக கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்று சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தது.

அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு சிகிச்சை நாடி வந்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அத்தகைய நோயாளிகளுக்கு மேலும் படுக்கைகளை ஒதுக்க வேண்டிய நிலை இருந்ததாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு தெரிவித்தது.

அவசரமற்ற அறுவை சிகிச்சைகளையும் அவசர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளையும் மருத்துவமனைகள் குறைத்துக்கொண்டு வரும் வேளையில் மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த பயன்பாட்டுக்கு நெருக்கடி மேலும் அதிகமாகி வருகிறது என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் பக்கத்தில் இது பற்றி கருத்து கூறியிருந்தார்.

"இந்தக் காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்கும் சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் சுமை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கக் கூடாது.

"இதுவே சுகாதார அமைச்சு எதிர்நோக்கும் ஆகப்பெரிய சவால். இதற்குத் தீர்வுகாண முடிந்தவரை பாடுபட்டு வருகிறோம்," என்று அமைச்சர் தெரிவித்தார்.

முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் வயதினர், கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் வீட்டில் இருந்தே குணமடைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் குறிப் பிட்டார்.

குறிப்புச் சொற்கள்