5-11 வரையிலான சிறுவர்கள்: 100,000க்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி

2 mins read
9b7c3dc6-b77c-406c-a368-b9181ed75f04
5 முதல் 11 வயது வரையிலான உடன்பிறந்தவர்கள் ஒன்றாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாட்டில் சுமார் 2,800 சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  -

ஐந்து முதல் 11 வயது வரையிலான 100,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சனிக்கிழமை (ஜனவரி 15) நிலவரப்படி கொவிட்-19 முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், அரசாங்கத் தொடக்கப் பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்று முதல் ஆறு வரை படிக்கும் மாணவர்களில் ஐந்து பேரில் இருவர், முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

கல்வி அமைச்சு சனிக்கிழமை அன்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.

மேலும், 5 முதல் 11 வயது வரையிலான உடன்பிறந்தவர்கள் ஒன்றாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது .

அத்தகைய உடன்பிறந்தோரில் ஒருவருக்கு மட்டும் முன்பதிவு செய்துகொண்டால் போதும். மற்றவர் பதிவு செய்யாமல் உடன்வரலாம்.

இந்த வாரம் நடப்புக்கு வந்த அத்திட்டத்தின் கீழ் கடந்த திங்கள் முதல் வியாழன் வரை சுமார் 2,800 சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவர்களுக்கான தடுப்பூசி நடவடிக்கையின் அடுத்த கட்டம் வரும் திங்கட்கிழமை தொடங்கும்.

அதில் சிறுவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.

அத்துடன், சிறப்புத் தேவையுள்யோருக்கான பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் நடவடிக்கை கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இங்குள்ள 20 சிறப்புத் தேவையுள்ளோருக்கான பள்ளிகளுக்கு தடுப்பூசிக் குழுவினர் சென்றுள்ளனர்.

சிறப்புத் தேவை உள்ள மாணவர்களுக்கு உதவுவதில் அனுபவம் பெற்ற அந்தக் குழுக்களில் சுகாதார மேம்பாட்டுக் கழகத்தின் ஊழியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சிறப்புத் தேவை உள்ளோருக்கான பள்ளிகளில் படிக்கும் மூன்றில் இரண்டு மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்