சுயமாக மேற்கொள்ளப்படும் 'ஏஆர்டி' பரிசோதனையின் மூலம் தங்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தோரையும் 'பூஸ்டர்' எனும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நீண்டகாலத்தில் கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டோரும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. அத்தகையோர் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் அபாயம் ஏதும் இல்லை என்று கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கான வல்லுநர் குழு தெரிவித்ததாக அமைச்சு சுட்டியது.
"உங்களுக்கும் கூடுதல் தடுப்பூசியைப் போடுமாறு நமது தடுப்பூசி நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது," என்று அமைச்சு சொன்னது. அவர்கள் திருப்பியனுப்பப்படமாட்டார்கள் என்றும் அமைச்சு கூறியது.
எனினும், கிருமித்தொற்றுக்கு ஆளான பிறகு கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்பாதோர், கிருமித்தொற்று ஏற்பட்டபோது மருத்துவரிடம் சென்றோர், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும்போது கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தவர்கள் ஆகியோரின் மருத்துவத் தகவல்களில் கிருமித்தொற்று ஏற்பட்டது குறிப்பிடப்பட்டால் அவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கலாம். மருத்துவத் தகவல்களை 'ஹெல்த்ஹப்' தளத்தில் காணலாம்.
"கிருமித்தொற்று ஏற்பட்டது கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்கு சமம். அது, உங்கள் மருத்துவத் தகவல்களில் தானாகவே பதிவாகிவிடும், நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை," என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
சொந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஏஆர்டி பரிசோதனை, வேலையிடங்களில் திட்டமிட்டபடி அடிக்கடி நடத்தப்படும் பரிசோதனைகள் போன்றவற்றின் மூலம் கொவிட்-19க்கு ஆளானது தெரியவந்தோரின் மருத்துவத் தகவல்களில் அது குறிப்பிடப்படாது.
கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படாவிட்டாலும் உடல்நலம் சரியில்லாதோர் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்குமாறு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். சீனப் புத்தாண்டு நெருங்கும் வேளையில், மிகவும் விவேகமாக நடந்துகொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.

