உக்ரேன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுடன் கைகோக்க உக்ரேனுக்கு அண்டை நாடான பெலருஸ் தயாராகி வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெலருசின் இந்த ராணுவ நடவடிக்கை திங்கட்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கக்கூடும் என்று அந்த அதிகாரி கூறியதைச் சுட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டது.
"ரஷ்ய அதிபர் மாளிகைக்கு ஆதரவாக மின்ஸ்க் (பெலருஸ் தலைநகர்) இருப்பது தெளிவாகத் தெரிகிறது," என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை மாலை கூறினார்.
பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கஷென்கோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு நெருங்கிய நண்பராக உள்ளார்.
பெலருஸ் உடனான உக்ரேனிய எல்லையில் ரஷ்ய ராணுவம் படையெடுத்ததைத் தொடர்ந்து, உக்ரேனும் ரஷ்யாவும் அரசதந்திர ரீதியில் முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்தும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடமிர் செலென்ஸ்கி முன்னதாகக் கூறியிருந்தார்.
உக்ரேனின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான கார்கிவைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) எண்ணெய் எரிவாயு நிலைகளைக் கொளுத்தினர். தலைநகர் கியவில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் கார்கிவ் உள்ளது.


