கொவிட்-19 விதிகள் எளிமையாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதன் தொடர்பில் விசாரிக்க பயண முகவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, ஜூன் பள்ளி விடுமுறையின்போது வெளிநாடு செல்வதன் தொடர்பில் கூடுதலானோர் தங்களிடம் விசாரித்து வருவதாக பயண முகவைகள் கூறுகின்றன.
தாய்லாந்து, வியட்னாம், இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதன் தொடர்பில் வாடிக்கையாளர்கள் விசாரிக்கின்றனர்.
கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தனிமை உத்தரவிலிருந்து விலக்கு பெற 'விடிஎல்' விமானங்களில்தான் ஏறவேண்டும் என்ற கட்டாயம் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கிடையாது. இதனால், பயணிகள் எந்த விமானத்தைத் தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்குக் கூடுதல் தெரிவுகள் கிடைக்கும்.
விமான, ஹோட்டல் கட்டணங்கள் முன்பைவிட அதிகமாக இருப்பதுபோல தெரிந்தாலும், அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய விமான நிறுவனங்களும் ஹோட்டல்களும் ஆற்றலை மேம்படுத்தும் என்பதால் காலப்போக்கில் கட்டணங்கள் இயல்புநிலைக்குத் திரும்பும் என எக்ஸ்பீடியா குழுமத்தைச் சேர்ந்த லாவண்யா ராஜாராம் கருத்துரைத்தார்.


