கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட குறுகியகால பயணிகள், சிங்கப்பூருக்கு வரும்போது பயணக் காப்புறுதி வைத்திருக்க வேண்டியது நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் கட்டாயமில்லை.
சுகாதார அமைச்சின் பொதுப் பயண பிரிவு நாடுகள் அல்லது வட்டாரத்தின்கீழ் தரைவழி, கடல்வழி அல்லது ஆகாயவழி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வோருக்கு இது பொருந்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 31) தெரிவித்தது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிராத 12 மற்றும் அதற்கும் குறைந்த வயதுடைய சிறார்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களைப் போன்றே இதே நடைமுறையின்கீழ் சிங்கப்பூருக்கு வரலாம்.
முன்னதாக, சிங்கப்பூருக்கு வந்த குறுகியகால பயணிகள் பயணக் காப்புறுதி வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக இருந்து வந்துள்ளது. கொவிட்-19க்காக இங்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுமாயின் அதற்கான செலவை அவர்கள் ஏற்பதை பயணக் காப்புறுதி உறுதிசெய்தது.


