இல்லப் பணிப்பெண்களைப் பணியமர்த்திய முதல் ஆறு மாதங்களுக்குள் அவர்களது பணி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முதலாளிகளுக்கு, பணிப்பெண் முகவை விதித்திருந்த கட்டணத்தில் குறைந்தது பாதியளவைத் திரும்பப் பெற ஜூன் மாதத்திலிருந்து முடியும்.
மனிதவள அமைச்சு இன்று வியாழக்கிழமை (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தது. மூன்று பணிப்பெண்கள் வரை வேலை நியமனம் வழங்கும் முதலாளிகளுக்கு கட்டணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறை பொருந்தும்.
கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, வேறொரு பணிப்பெண்ணைப் பணியமர்த்த முதலாளிகள் முகவையிடம் கோரலாம். முகவை அந்தத் தெரிவை வழங்கும் பட்சத்தில் முதலாளிகள் அதனைக் கோரலாம்.
ஆனால், குறிப்பிட்ட சில சூழலில் முதலாளிகளுக்குக் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது. எடுத்துக்காட்டாக, பணிப்பெண்ணின் பராமரிப்பைப் பெற்று வந்த ஒருவர் இறந்துவிட்டாலோ வேறோர் இடத்துக்கு மாறிவிட்டாலோ அப்பணிப்பெண்ணின் சேவை இனி தேவையில்லை என்பதால் அவரது வேலை நியமனத்தை ரத்து செய்யும் பட்சத்தில், முதலாளிகளுக்குப் பணம் திருப்பித் தரப்படாது.
மேலும், பணிப்பெண்ணை வேலையில் அமர்த்துவதில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் பணிப்பெண் முகவையை முதலாளி நாடினாலோ, வேலை நியமனச் சட்டங்களை முதலாளி மீறியது கண்டறியப்பட்டாலோ, பணிப்பெண்ணுக்கு எதிராக குற்றம் புரிந்தாலோ முகவையிடமிருந்து கட்டணத்தைத் திரும்பப் பெற முதலாளிகள் தகுதிபெற மாட்டார்கள்.
கட்டணத்தைத் திரும்பப் பெற விரும்பும் முதலாளிகள், பணிப்பெண்ணின் வேலை ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு முன்பு முகவையிடம் தெரியப்படுத்த வேண்டும்.


