இலங்கை அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைத்துக்கொள்வதற்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்து உள்ளனர்.
நாட்டின் பொருளியலைச் சீர்குலைத்துவிட்டதாகக் கூறி, அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தைத் தூக்கியெறிய எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், போதிய மாற்றங்களுடன் அரசியலமைப்பின் 19வது சட்டத் திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது என பிரதமரும் அதிபரின் சகோதரருமான மகிந்த ராஜபக்சே முன்மொழிந்த தீர்மானத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
முன்னதாக, தமக்கு வழங்கப்பட்டுள்ள செயலதிகாரங்களைக் குறைத்துக்கொள்ளும் நடைமுறைக்குத் தாம் ஆதரவு அளிப்பதாக நாட்டின் செல்வாக்குமிக்க புத்த பிக்குக்கு எழுதிய கடிதத்தில் அதிபர் கோத்தபாய குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் சட்ட முன்வரைவை உருவாக்க ஒரு துணைக்குழுவை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் போதிய ஆதரவைத் திரட்டிவிட்டதாக முக்கிய எதிர்க்கட்சி தெரிவித்ததை அடுத்து, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதற்கு 120 முதல் 140 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இதனிடையே, இலங்கையின் கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாண அந்நாடு தனது நாணயக் கொள்கையைக் கடுமையாக்கவும் வரியை உயர்த்தவும் நீக்குப்போக்கான நாணய மாற்று விகிதங்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என அனைத்துலகப் பண நிதியம் வலியுறுத்தியுள்ளது.
உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டாலும் விலையேற்றத்தாலும் கொதித்துப்போயுள்ள இலங்கை மக்கள், அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

