தாமதமாகும் 'பிடிஓ' வீட்டுத் திட்டங்கள் குறைந்துள்ளன

தாமதமாகும் 'பிடிஓ' வீட்டுத் திட்டங்கள் குறைந்துள்ளன

2 mins read
159b81d9-34ff-4793-934c-dfa262fc18e1
பொங்கோலில் உள்ள நார்த்‌ஷோர் எட்ஜ் பிடிஓ வீட்டுத் திட்டத்தை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (மே 25) அன்று பார்வையிட்டார். படம்: லியான்ஹ சாவ்பாவ் -

ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேல் தாமதமாகும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டங்கள் (பிடிஓ), கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளன.

கடந்த ஆண்டு 74 பிடிஓ வீட்டுத் திட்டங்கள் அவ்வாறு தாமதமாயின.

இந்த ஆண்டு ஆறு மாதம் அல்லது அதற்கும் மேல் தாமதமான திட்டங்களின் எண்ணிக்கை 58 ஆகக் குறைந்துள்ளது.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை அன்று இதைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 60 விழுக்காட்டுக்கும் குறைவான பிடிஓ வீட்டுத் திட்டங்கள் தாமதமாகி உள்ளன.

சென்ற ஆண்டு 80 விழுக்காட்டு பிடிஓ வீட்டுத் திட்டங்கள் தாமதம் ஆகின.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடந்த 2019ஆம் ஆண்டு 13,500 உரிமையாளர்களுக்கு வீட்டுச் சாவிகளை ஒப்படைத்தது. சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 15,000 வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.

"இந்த ஆண்டு இன்னும் அதிகமானவர்களிடம் வீட்டுச்சாவிகளை ஒப்படைக்க தர முடியும் என்று நம்புகிறோம்," என்றார் திரு லீ.

இதற்கிடையே வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வரும் மே 27ஆம் தேதி அன்று ஐந்து இடங்களில் புதிய பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விட இருக்கிறது.

அவற்றில் மூன்று திட்டங்கள், முதன்மை வட்டாரத் திட்டத்தின்கீழ் கட்டப்படும்.

புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன், தோ பாயோ, ஜூரோங் வெஸ்ட், யீ‌ஷுன் ஆகிய வட்டாரங்களில் 4,500 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன், ஆகிய வட்டாரங்களில் உள்ள பிடிஓ வீடுகள் முதன்மை வட்டாரத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திங்கள் அன்று அறிவித்திருந்தது.

மே 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 2 வரை இந்த வீடுகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.