உலகளவில் விமானப் பயணங்கள் தொடர்ந்து வேகமாக சூடுபிடிக்கின்றன. இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏறக்குறைய 2,000 விமான ஊழியர்களை வேலையில் சேர்க்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஏற்கெனவே மார்ச் முதல் அத்தகைய 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களில் ஏறக்குறைய ஐந்து பேரில் மூவர் முன்னாள் விமான ஊழியர்களாக வேலை பார்த்தவர்கள்.
தேவைப்படக்கூடிய இதர ஊழியர்கள் நடப்பு நிதி ஆண்டு முடிவு வாக்கில் வேலையில் சேர்க்கப்பட்டு விடுவார்கள் என்று எஸ்ஐஏ நிறுவனம் தெரிவித்தது.
எஸ்ஐஏ குழுமம் 2020 செப்டம்பரில் கிட்டத்தட்ட 4,300 வேலைகளைக் குறைத்தது.
அந்த ஆள்குறைப்புக்கு முன்னதாக எஸ்ஐஏ குழுமத்தில் கிட்டத்தட்ட 3,200 விமானிகளும் ஏறக்குறைய 11,000 விமானச் சிப்பந்திகளும் வேலை பார்த்தனர்.
இதனிடையே, இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங், எஸ்ஐஏவில் விமானிகள் எண்ணிக்கை இன்னமும் கொவிட்-19க்கு முந்திய எண்ணிக்கையுடன் ஒத்து இருப்பதாகத் தெரிவித்தார்.
எஸ்ஐஏ நிறுவனத்தின் இப்போதைய விமானிகள், விமான சிப்பந்திகளில் கிட்டத்தட்ட எல்லாரும் அதேபோல கிட்டத்தட்ட எல்லா விமானங்களும் முறையாக பறக்கத் தொடங்கிவிட்டதாக அவர் கூறினார்.
என்றாலும் விமானப் பயணத் துறை தொற்றில் இருந்து இன்னமும் மீட்சி கண்டு வருவதால் விமான சிப்பந்திகளும் சரி விமானங்களும் சரி நூற்றுக்குநூறு முற்றிலும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என்றாரவர்.
இருந்தாலும் நடைமுறையில் எல்லாம் தயாராக இருக்கும் வகையில், அவர்களைப் பணிகளில் ஈடுபடுத்துவதாக அவர் கூறினார்.
எஸ்ஐஏ நிறுவனம் தனது விமான சிப்பந்திகளின் எண்ணிக்கையை முன்பு இருந்த அளவுக்கு முற்றிலும் அதிகரிக்கவேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்று அவர் விளக்கினார்.
இந்தக் காலாண்டில் பயணிகளின் அளவு, கொவிட்-19க்கு முன்பு இருந்த அளவில் 61 விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த அளவு 67 விழுக்காடு ஆகும் வாய்ப்பு உள்ளது. இதுவே அதற்கான காரணம் என்றார் அவர்.
கொஞ்ச காலத்திற்குச் சில சந்தைகள் மூடி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்படி கொஞ்ச காலத்திற்கு சீனா மூடி இருக்க வேண்டிய சூழல் இருக்கலாம். அது எப்போது திறக்கப்படும் என்பது நமக்குத் தெரியாது.
ஆகையால் இப்போதைக்கு நூறு விழுக்காடு பழையபடி திரும்ப வேண்டிய தேவை இல்லை என்றார் அவர்.
இப்போது விமானங்களைக் கையாள போதிய அளவிற்கு விமான சிப்பந்திகள் இருக்கிறார்கள்.
என்றாலும் எஸ்ஐஏவின் பயணிகள் சேவை மையத்துடன் அதிகம் பேர் தொடர்புகொள்வதால் அவற்றைச் சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார் தலைமை நிர்வாகி.

