தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைப்பூச நடைமுறை இன்னும் மேம்படுத்தப்படலாம்: அமைச்சர் சண்முகம்

3 mins read
a4f7aefa-c3d5-4a01-88d8-ae921e4ad134
தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுடன் கலந்துரையாடும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: தமிழ் முரசு
multi-img1 of 3

தைப்பூச ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தபோதும் நடைமுறையில் மேம்பாடுகள் செய்யலாம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

“ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. பக்தர்களிடம் நான் பேசியபோதும் அவர்களில் சிலர், பால்குடம் ஏந்தியவர்கள், இரண்டு, இரண்டரை, மூன்று மணி நேரம் வரையிலும் காத்திருந்ததாகக் கூறுகின்றனர். இதற்கு ஏதேனும் செய்யலாம் என்று நினைக்கிறேன்,” என்றார் திரு சண்முகம்.

குறிப்பாக, முதியோருக்குப் பயன் அளிக்கும் வகையில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பது பற்றி ஆலயங்களிடம் பேசியுள்ளதாக திரு. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தைப்பூசத் திருநாளான செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளையும் பால்குடங்களையும் சுமந்து தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர். திங்கட்கிழமை (பிப்ரவரி 10) இரவு 11.30 மணிக்கு பால்குடங்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து தேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை நோக்கி வரிசையாகப் புறப்பட்டன. பின்னர், அலகுக் காவடிகள் அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டன.

திருவிழாவைச் சிறப்பித்த திரு சண்முகம், காலையில் ஏறத்தாழ 8 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வந்தடைந்து வழிபாடு செய்த பின்னர், வேண்டுதல் செலுத்தத் தயாராகிக்கொண்டிருந்த பக்தர்களிடமும் தொண்டூழியர்களிடமும் உரையாடினார். அதன் பின்னர், தெண்டாயுதபாணி ஆலயத்திற்குச் செல்லும் வழியிலும் வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் பேசினார்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தர்களைச் சந்தித்தார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தர்களைச் சந்தித்தார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: தமிழ் முரசு

தைப்பூசத்தின் பிரபலம் பெருகி வருவதாகக் கூறிய அமைச்சர், செவ்வாய்க்கிழமை வார நாளாக இருந்தபோதும், காணிக்கை செலுத்த வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகக் கூறினார்.

“ஆலய மூலவரைத் தரிசிக்க மக்கள் வரும்போது நான்கு ஐந்து நிமிடங்கள் நிற்க விரும்புவர். இதே போல 10, 12 பேர் செய்யும்போது ஏறத்தாழ ஒரு மணி நேரம் தாமதமாகிறது,” என்றார் அமைச்சர் சண்முகம்.

இது குறித்து இரண்டு ஆலயங்களிடமும் பேசியதாகக் குறிப்பிட்ட திரு சண்முகம், தொழில்நுட்பம் மூலம் இந்த நடைமுறையை மேலும் எப்படி எளிதாக்கலாம் என்பது குறித்த கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

தேங் ரோடு ஆலய நிர்வாகக் குழுவினருடன் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாடிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம்.
தேங் ரோடு ஆலய நிர்வாகக் குழுவினருடன் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாடிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: யோகிதா அன்புச்செழியன்

“தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம், பக்தர்களைக் குழுக்களாகக் கட்டங்கட்டமாக (தொடக்கப்புள்ளியிலிருந்து) வெளியே விடலாம். எது நடைமுறைக்கு ஒத்துவரும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எது சாத்தியம் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட இரண்டு ஆலயங்களிடமும் பேசுவேன்,” என்றார் திரு சண்முகம்.

மாறா மனநிறைவு

தைப்பூசத்திற்காக முதன்முதலாக அலகுக் காவடி சுமந்த, பொறியாளர் சரவணன் ராஜேஸ்வரன், 30, உற்றார் உறவினர் சூழக் காலை வெயிலைப் பொருட்படுத்தாது நடந்து சென்றார். 

“இறைவனுக்கு வேண்டுதல் செலுத்தப்போவதாக உறுதி பூண்டதை அடுத்துக் கடந்த ஆண்டு என் மகள் ஷேனா பிறந்தாள். இறைவனுக்கு இன்று நன்றி செலுத்த முடிவதை எண்ணி மகிழ்கிறேன்,” என்றார் சரவணன். 

பல்லாண்டுகளாகப் பால்காவடி சுமந்த தாயாரைப் பின்பற்ற எண்ணியதாகக் கூறும் பல்கலைக்கழக மாணவி நுஷா தக்‌ஷாய்னி, 25, பால் காவடி சுமந்தார்.

“இதற்காக முப்பது நாள் விரதம் இருந்தேன். இதுவரை இவ்வளவு நாள் விரதம் இருந்ததில்லை. இத்திருநாள் எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

தேங் ரோடு கோயில் மட்டுமன்றி, சிங்கப்பூரிலுள்ள பல்வேறு முருகன் கோயில்களிலும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனைச் செலுத்தி வருகின்றனர். வழக்கமாக தேங் ரோடு ஆலயத்தில் பால் குடம் செலுத்தும் பாலர்பள்ளி ஆசிரியர் சரளா தேவி கணேஷ், 47, இம்முறை புக்கிட் பாஞ்சாங் முருகன் திருக்குன்றம் ஆலயத்தில் பால் குடம் எடுத்தார்.

“ஆற அமர இறை தரிசனம் செய்தேன். நான் கொண்டு வந்த பால், முருகப்பெருமானின் திருமேனி மீது ஊற்றப்பட்டதை முழுமையாக, இறுதித் துளி வரை கண்டேன்,” என்று அவர் அகமகிழ்ந்து கூறினார்.

ஊர்வலத்தில் 15,477 பால்குடங்கள், 307 பால் காவடிகள், 14 தொட்டில் காவடிகள், 302 அலகுக் காவடிகள் பங்கேற்றதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது. 

குறிப்புச் சொற்கள்