இணையத் தாக்குதல் தளங்களாகச் செயல்பட்ட 1,000 கணினிச் சேவையகங்கள் கண்டுபிடிப்பு

இணையத் தாக்குதல் தளங்களாகச் செயல்பட்ட 1,000 கணினிச் சேவையகங்கள் கண்டுபிடிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

15 Nov 2026 - 4:17 pm

2 mins read

தோக்கியோ: செயற்கை நுண்ணறிவினால் தூண்டப்பட்ட இணையத் தாக்குதல்களுக்குத் தளங்களாகச் செயல்படுவதாகச் சந்தேகிக்கப்படும் 1,000 கணினிச் சேவையகங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

அவை கடந்த அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டில் இருப்பதாக ஜப்பான் தலைமையில் நடைபெற்ற அனைத்துலக அளவிலான விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தக் கணினிச் சேவையகங்கள், உலகெங்கிலும் உள்ள இணையத்தளங்களைக் குறிவைத்து, அவற்றிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் தேடியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இணைய ஊடுருவல்களை மேற்கொள்ள நீண்ட நாள்கள் தேவைப்பட்டு வந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவின் துணையுடன் அவை எளிதில் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்தகைய 600 முதல் 700 கணினிச் சேவையகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை, ‘ஆர்டெக்ஸ்’ எனப்படும்  ஊடுருவல் சோதனைக் கருவியால் இயக்கப்படும் தளங்களைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும் அவை, கணினிப் பாதுகாப்புக் குறைபாடுகளைத் தேடுவதுடன், உள்ளமைவு கோப்புகளைத் திருட முயற்சிப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

ஒரு குறிப்பிட்ட கணினிச் சேவையகத்தில், ‘ஆந்த்ரோபிக்’ எனும் நிறுவனத்தின், செயற்கை நுண்ணறிவின் துணையால் உருவாக்கப்பட்ட நிரலாக்க ஆதரவுக் கருவியின் தடயங்கள் இருந்தன. 

இது, அந்த இணையக் குற்றவாளிகள் தங்கள் ஊடுருவல் திறன்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளதைக் குறிக்கிறது.

சிலவற்றில், திறன்பேசிச் செயலிகளின் உள்கட்டமைப்புகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான கருவிகள், கணினி குறைபாடுகளைச் சோதிப்பதற்கான நிரல்களும் சில கணினிச் சேவையகங்களில் இருப்பது தெரிய வந்தது.

ஊடுருவல்களுக்காகச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுத்தப்படுவது தொடங்கியுள்ள நிலையில், இவ்வகையிலான அதிநவீனத் தாக்குதல்கள் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் எனவும் வல்லுநர்கள் கருத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்