பேங்காக்: இரண்டாம் உலகப் போரின்போது ரயில் பாதை அமைக்கும் பணியின்போது உயிரிழந்த தமிழர்களின் எஞ்சிய உடல்பாகங்களைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பேங்காக் மலேசியர்கள் மற்றும் இந்தியர்கள் (MIB) என்னும் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
எஞ்சிய உடல் பாகங்கள் மேற்கு தாய்லாந்து மாநிலமான காஞ்சன்புரியில் உள்ள ஜீத் (JEATH) போர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
அந்த அருங்காட்சியகம் இவ்வாண்டு ஏப்ரல் இறுதியில் நிரந்தரமாக மூடப்பட இருப்பதால் அந்த உடல் பாகங்களை சம்பிரதாயச் சடங்குகள்படி எரியூட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் எம்ஐபி அமைப்பின் தலைவர் டாக்டர் சில்வா குமார் கூறினார்.
இரண்டாம் உலகப் போரின்போது வலுக்கட்டாயமாக ஆசியத் தொழிலாளர்களை 415 கிலோமீட்டர் நீள தாய்லாந்து-பர்மா ரயில்வே பாதை அமைக்கும் பணியில் ஜப்பானிய ராணுவம் ஈடுபடுத்தியது.
அந்தத் தொழிலாளர்கள் ஜப்பானிய மொழியில் ரொமுஷா (Romusha) என்று அழைக்கப்பட்டனர்.
ரயில்வே பாதை அமைக்கும் பணியின்போது பல்லாயிரம் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதிகாரத்துவ எண்ணிக்கை வெளிவராவிட்டாலும் ஏறத்தாழ 100,000 பேர் மாண்டதாக மதிப்பிடப்பட்டது. அவர்களில் 12,000 பேர் போர்க் கைதிகள் எஞ்சிய பல்லாயிரம் பேர் ரொமுஷா தொழிலாளர்கள்.
காஞ்சன்புரியில் ஆளுநர் அலுவலகம் அருகே கட்டுமானத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டபோது 500 எலும்புகள் கண்டறியப்பட்டன. ரயில்வே பணியின்போது மாண்டவர்களின் அந்த எலும்புகளில் 106 ஜீத் அருங்காட்சியகத்திடம் சில்பேகோர்ன் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சித் துறையினர் அளித்தனர்.
அது போக எஞ்சிய எலும்புகள் சீன அறநிறுவனம் ஒன்றின் மூலம் எரியூட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது அருங்காட்சியகத்தில் உள்ள 106 எலும்புகளும் ரொமுஷா தமிழ் தொழிலாளர்கள் என்று நம்பப்படுகிறது. அவற்றை பகுதி பகுதியாக சம்பிரதாய மரபுப்படி எரியூட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
காஞ்சன்புரியில் உள்ள பௌத்த ஆலயத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் பௌத்த பிக்குகள் வழிபாட்டு மந்திரங்களை ஒலிக்க, எலும்புகள் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் நடுகல் என்னும் தமிழ் நினைவுத் தூண் அமைத்து புதைக்கப்படும் என்றும் டாக்டர் சில்வா திங்கட்கிழமை (ஜனவரி 13) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எரியூட்டுவதற்கு 30,000 தாய் பாட் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அதற்கு பொதுமக்களின் ஆதரவை நாடி வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.