பேங்காக்: கடந்த வாரயிறுதியில் மியன்மாரின் பல பகுதிகளில் ராணுவ ஆட்சியினரின் படைகள் தாக்குதல் நடத்தின.
அவற்றில் மகப்பேறு மருத்துவமனையுடன் ஒரு பள்ளிக்கூடமும் அடங்கும். மருத்துவமனையில் பிறந்து ஏழு நாள்களே ஆன பெண் குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய இனக்குழுவினர், உதவிப் பணியாளர், மனித உரிமைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அதனை உறுதிப்படுத்தினர்.
இழந்த நிலப்பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ராணுவ ஆட்சியினர் ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுக்கள் இருக்கும் இடங்களைத் தாக்கியதன் விளைவாக அந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அண்மைய காலமாக பல அண்டை நாடுகளுடன் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்த ராணுவ ஆட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் தனது உள்நாட்டுக் கிளர்ச்சிகளை ஒடுக்க மியன்மார் முயன்றுவருகிறது.
இத்தாக்குதல் குறித்து ராணுவ ஆட்சியின் சார்பில் உடனடியாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தீவிரவாதிகளுக்கு எதிரான சட்டபூர்வ இயக்கத்தையே தாம் நடத்திவருவதாக ராணுவ ஆட்சி அடிக்கடி கூறிவருகிறது.
அராக்கான் படை என்று அழைக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு, மியன்மாரின் மேற்கில் உள்ள ராக்கைன் மாநிலத்தின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதன் தலைநகரான சிட்வேயை அடையும் நோக்கில் அராக்கான் படை அதனை நெருங்கிவருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ராணுவ ஆட்சியினரின் வான்வழித் தாக்குதலில் நான்கு ராக்கைன் நகரங்கள் குறிவைக்கப்பட்டன.
அத்தாக்குதல்கள், குவாக்தாவ் பாலம், குவாக்பியு, பாவ்தவ் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களைச் சேதப்படுத்தின.
மிராவுக்-யூ என்ற ராக்கன் படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ஒரு தற்காலிக மகப்பேறுப் பிரிவு இயங்கும் மருந்தகம் பாதிக்கப்பட்டது. அதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர். அதனை அராக்கான் படையின் பேச்சாளரும் மருத்துவ உதவி ஊழியர் ஒருவரும் உறுதிசெய்தனர்.
இரட்டைக் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்து ஒருவாரமே ஆன அக்குழந்தைக்கு உடன் பிறந்த மற்றொரு குழந்தை உயிருடன் வீட்டில் உள்ளது. சிகிச்சைக்காக அந்த மருந்தகத்தில் இருந்த குழந்தை வெடிகுண்டுத் தாக்குதலில் கட்டடக் கூரை அதன்மீது இடிந்து விழுந்து மரணமடைந்தது.
சுகாதார ஊழியர்களுடன் மேலும் நால்வர் அத்தாக்குதலில் உயிரழந்தனர் என்று மருத்துவ உதவிப் பணியாளர் வைய் ஹும் அவுங் கூறினார்.
அந்தச் சம்பவத்துக்கு ஒருநாள் முன்பாக, தாய்லாந்து எல்லையருகே மியன்மாரின் கிழக்கில் உள்ள காயா மாநிலத்தில் பாடம் நடக்கும்போது ஒரு பள்ளிமீது ராணுவ ஆட்சியின் தாக்குதல் நடந்தது. அதில் மூன்று மாணவர்கள் மரணமடைந்ததோடு, ஐவர் காயமுற்றனர். அதனை காரென்னி மனித உரிமைக் குழு உறுதிப்படுத்தியது. அதோடு ஊடுருவலைத் தடுக்க தாய்லாந்தின் ஆகாயப்படை தற்காப்புக்கான கண்காணிப்புப் பணிகளைச் எல்லையில் செய்து வருகிறது.
