சண்டாகான்: மலேசியாவின் கிழக்கு மாநிலமான சபாவில் உள்ள ஒரு கிராமத்தில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த ஏறத்தாழ 200 வீடுகள் முற்றாக அழிந்தன.
சண்டாகான் பகுதியில் உள்ள கம்போங் பஹாகியாவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) அதிகாலை 1.32 மணியளவில் நடந்த அச்சம்பவம் குறித்து சபா மாநிலத் தீயணைப்பு, மீட்புத் துறை விவரங்களை வெளியிட்டது.
தண்ணீர் சூழ்ந்த அந்தக் கிராமத்தில் மிதப்பதுபோலக் காட்சியளிக்கும் வீடுகள், மரத்தூண்கள் தாங்கும் விதத்தில் பலகையால் மிக நெருக்கமாக அமைக்கப்பட்டவை.
தற்காலிகமான அந்தக் குடியிருப்பில், தீ மூண்டதும் மிகவிரைவில் மற்ற வீடுகளுக்கும் அது பரவியது என்று தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது. அழிந்துபோன ஒவ்வொரு வீடும் சராசரியாக 300 சதுர அடி பரப்பளவு கொண்டவை. சண்டாகான், கினாபதாங்கான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 35 வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை 1.48 மணிக்குச் சென்றடைந்தன.
தீ வெகு விரைவாகப் பரவியதன் முக்கியக் காரணங்கள்
வீடுகளுக்கு இட்டுச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருந்ததால், தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை அடையத் தாமதமானது. அங்குச் சூழ்ந்திருந்த இயற்கை நீரைத் தீயணைப்பில் பயன்படுத்த இயலாவண்ணம் நீர்மட்டம் வற்றியிருந்ததும் வேகமாக வீசிய காற்றும் நெருக்கமாகக் கட்டப்பட்ட வீடுகளும் தீ வேகமாகப் பரவியதற்கு முக்கியக் காரணங்கள்.
தீயணைப்புப் பணிகளில் அரசு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு
அருகில் அமைந்த தொழிற்சாலையில் இருந்த தீயணைப்பு நீர்முனையையும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட நீரையும் பயன்படுத்தித் தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. சபா மாநில மின்சாரத் துறை, குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை ஆகிய அரசாங்க அமைப்புகள் தீயணைப்பு முயற்சியில் ஒருங்கிணைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மலேசியப் பிரதமரின் கருத்து
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், தீ பற்றிய செய்தியறிந்து மிகவும் வருந்துவதாகவும், வீடுகளை இழந்து வாடும் மக்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்களை அமைப்பதும் தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதும் தலையாய கடமை எனவும் தெரிவித்தார்.

