லண்டன்: பசிபிக் பெருங்கடலில் தற்போது உருவாகி வரும் ‘எல் நினோ’ (El Niño) பருவநிலை மாற்றம், வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்துடன், எல் நினோ நிகழ்வும் சேர்வதால், 2027ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக மாற அதிக வாய்ப்புள்ளதாகப் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இயற்கையாகவே இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் எல் நினோ நிகழ்வின்போது, பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கடல்நீர் வெப்பமடையும்.
கடல் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம்
கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போது எல் நினோ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
தற்போதைய அளவீடுகளின்படி கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ தன் உச்சத்தை எட்டும்போது, இது 3 டிகிரி செல்சியஸ்வரை உயரக்கூடும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுக்குப் பிந்தைய பதிவுகளில் இத்தகைய உயர்வு இதுவே முதன்முறையாகும்.
சில அமெரிக்கப் பருவநிலை ஆய்வு அமைப்புகள் இது 4 டிகிரி செல்சியஸ்வரை உயரக்கூடும் என்றும், கடந்த 500 முதல் 1,000 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நிகழ்வாக மாறக்கூடும் என்றும் கணித்துள்ளன.
எல் நினோவின்போது கடலில் இருந்து வளிமண்டலத்திற்குப் பேரளவு வெப்பம் உமிழப்படுவதால், 2024ஆம் ஆண்டின் வெப்பப் பதிவை முறியடித்து 2027 மிக வெப்பமான ஆண்டாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம், குறைந்த மழை, உணவுப் பற்றாக்குறை
இந்தக் கோடைக்காலத்தின் கடும் வெப்பத்துக்கு எல் நினோ முக்கியக் காரணமன்று. ஆனால், வரும் மாதங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பின்பனிக்காலத்தில் மிக அதிகக் குளிரை அது ஏற்படுத்தலாம் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.
வெப்பப் பரிமாற்றத்தால் உலகெங்கிலும் ஏற்கெனவே பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. தெற்காசியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாகப் பெய்யத் தொடங்கியுள்ளது.
கரீபியன் கடல், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வறட்சி, காட்டுத்தீ ஆபத்தும், பெரு, எக்குவடார், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஆபத்தும் அதிகரித்துள்ளன.
பிரிட்டன் உட்பட வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில் வரும் இலையுதிர்பருவம் புயல், கனமழையுடன் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் பல மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை அமைப்பும் (FAO) அச்சம் தெரிவித்துள்ளது.


