புக்கெட் படகுத்துறை தீயில் கருகின 22 விசைப்படகுகள்

2 mins read
359ca6e7-0504-40f6-b7b9-a6b8e9b06e79
தாய்லாந்தின் பிரபல சுற்றுலா தளமான புக்கெட்டின் ‌‌சாலோங் பே படகுத்துறையில் அதிகாலை வாக்கில் தீ மூண்டது. - படம்: நே‌‌ஷன் தாய்லாந்து

புக்கெட்: தாய்லாந்தின் பிரபல சுற்றுலா தளமான புக்கெட்டின் ‌‌சாலோங் பே படகுத்துறையில் அதிகாலை வாக்கில் தீ மூண்டது. அதில் 13 நிறுவனங்களுக்குச் சொந்தமான 22 விசைப்படகுகள் சேதமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நாளுக்கான சுற்றுலாப் பயணங்களை முன்னிட்டு பல படகுகளில் ஏற்கனவே முழுமையாக எரிப்பொருள் நிரப்பட்டிருந்த நிலையில் திடீரென விசைப்படகு ஒன்று வெடித்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

அதையடுத்து தீ மளமளவென அருகில் உள்ள மற்ற படகுகளுக்குப் பரவியது. தீயில் கருகிய படகுகளின் தொகை 38 மில்லியன் பாட் ($1.2 அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்படுகிறது.

தீ விபத்தில் உயிருடற்சேதம் இல்லை என்றபோதும் தீச் சம்பவத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக படகு நிறுவனங்கள் கூறின.

அதிகாலை 4 மணியளவில் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மீட்புத் துறைக்கும் தகவல் கிடைத்தது. அதையடுத்து நான்கு நகராட்சிகளிலிருந்து தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

தீ ஒருவழியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு சேதமடைந்த படகுகளை அப்புறப்படுத்தும்படி புக்கெட் ஆளுநர் நிராட் பொங்சித்தவோர்ன் உத்தரவிட்டார். தீயில் எரிந்துகொண்டிருந்த படகுகளைத் துரிதமாகத் தனிமைப்படுத்தியதற்காக மீட்புப் பணியாளர்களை அவர் பாராட்டினார்.

அவ்வாறு அவர்கள் செய்யத் தவறியிருந்தால் சாலோங் படகுத்துறையில் அணைந்திருந்த 1,000க்கும் அதிகமான படகுகளுக்குத் தீ பரவியிருக்கக்கூடும்.

சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகளுக்கும் தடயவியல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

புக்கெட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகளும் படகுகளின் எண்ணிக்கை குறைந்ததால் நேரத்துக்கு அங்கிருந்து புறப்பட முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

ஒரு சில நிறுவனங்கள் மாற்றுப் படகுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தாலும் பல சுற்றுலாக்கள் ரத்துசெய்யப்பட்டன. இதுவரை ஏற்பட்ட தீ விபத்துகளில் இதுவே ஆக மோசமானது என்றன படகு நிறுவனங்கள்.

இதுவரை ஏற்பட்ட தீ விபத்துகளில் இதுவே ஆக மோசமானது என்றன படகு நிறுவனங்கள்.
இதுவரை ஏற்பட்ட தீ விபத்துகளில் இதுவே ஆக மோசமானது என்றன படகு நிறுவனங்கள். - படம்: பட்டாயா மெயில்
குறிப்புச் சொற்கள்