வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் புரியும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள்மீது தாம் 25 விழுக்காடு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே பரவலான போராட்டங்களால் ஆட்டங்கண்டுள்ள ஈரானிய அரசாங்கத்துக்கு இந்த அறிவிப்பு நெருக்குதலை அதிகரித்துள்ளது.
புதிய வரி உடனடியாக நடப்புக்கு வருவதாக திங்கட்கிழமை (ஜனவரி 12) சமூக ஊடகத்தில் பதிவிட்ட திரு டிரம்ப், வரி விதிப்பு குறித்த மேல்விவரங்களை வெளியிடவில்லை.
திரு டிரம்ப்பின் இந்த நடவடிக்கை, உலகம் முழுவதும் அமெரிக்கா உடனான வர்த்தக உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஆற்றல் உள்ளது. ஈரானின் பங்காளித்துவ நாடுகளில் இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்டவை அடங்கும்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியப் பொருள்கள்மீது ஏற்கெனவே திரு டிரம்ப் 50 விழுக்காடு வரை வரி விதித்துள்ளார். இதன் தொடர்பில் உடன்பாட்டை எட்ட இந்தியாவும் அமெரிக்காவும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
சீனப் பொருள்கள்மீது கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கும் திரு டிரம்ப்பின் முடிவால் 2025 இறுதியில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் அவர் செய்துகொண்ட வர்த்தக உடன்பாடு முறியும் அபாயம் நிலவுகிறது.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் எதிர்வரும் தீர்ப்பு, திரு டிரம்ப்பின் இந்த அதிரடி முடிவுக்கு முட்டுக்கட்டையாக அமையலாம். ஒருவேளை நீதிபதிகள் திரு டிரம்ப்புக்கு எதிராகத் தீர்ப்பளித்தால், அவர் நினைத்ததுபோல் ஈரானின் பங்காளித்துவ நாடுகள்மீது விரைவாக வரி விதிக்க முடியாமல் போகலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை (ஜனவரி 14) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானிய நாணயம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதன் காரணமாக 2025 இறுதியிலிருந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏராளமான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது, 1979ல் நடந்த புரட்சிக்குப் பிறகு ஈரானிய அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திரு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
திரு டிரம்ப்பின் மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃபுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி வழிவகுத்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் திங்கட்கிழமை தெரிவித்தார்.

