மேற்கு ஐரோப்பாவை வாட்டிய வெப்பத்தால் 34,500 பேர் உயிரிழப்பு

மேற்கு ஐரோப்பாவை வாட்டிய வெப்பத்தால் 34,500 பேர் உயிரிழப்பு

படம்: ஏஎஃப்பி

02 Oct 2026 - 7:09 pm

2 mins read

மட்ரிட்: மேற்கு ஐரோப்பாவின் கோடைக்காலத்தில் இதுவரை இல்லாத வெப்பம் நிலவியதில் 34,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவின் பல்வேறு அமைப்புகள் பதிவு செய்த இறப்புகளை புளூம்பெர்க் மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி மேற்கு ஐரோப்பிய வரலாற்றில் இல்லாத மோசமான வெப்பம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதி கார்லோஸ்-3 சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி ஸ்பெயினில் மே 15 முதல் செப்டம்பர் 30 வரை நிலவிய வெப்பத்திற்குக் கூடுதலாக 5,805 பேர்வரை உயிரிழந்தனர்.

பிரான்சில் வெப்ப அலை காரணமாக ஏறக்குறைய 7,824 பேர் மாண்டனர். இது, அந்நாட்டின் தேசிய பொது சுகாதார அமைப்பின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி 2015க்குப் பிறகு பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும்.

ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் வெப்பம் தொடர்பான கூடுதல் உயிரிழப்புகளைப் பதிவுசெய்துள்ளன.

கோப்பர்நிகஸ் புவி கண்காணிப்புத் திட்டத்தின் அண்மைய மாதந்தர அறிக்கையின்படி, மேற்கு ஐரோப்பாவின் கோடைக்காலம் முழுவதும் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்பம் நிலவியது. சராசரி வெப்பநிலை 1991 முதல் 2020 வரையிலான சராசரியைவிட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியத்தின் அனைத்துப் பகுதிகளிலும், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியாவின் பெரும்பான்மையான பகுதிகளிலும் கோடைக்கால வெப்பம் 1979க்குப் பிறகு உச்சத்தை எட்டியிருப்பதை ஐரோப்பியத் தரவுகள் காட்டுகின்றன.

இதற்கு முந்தைய அதிகபட்ச வெப்பம் 2003ல் பதிவானது. அப்போது பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளைச் சந்தித்தன.

அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட கோப்பர்நிகஸ் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் 17 நாள்களில் மேற்கு ஐரோப்பாவின் குறைந்தது 60 விழுக்காட்டுப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் நிலவியது.

ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 52 விழுக்காட்டு பகுதிகளில் கோடைக்கால வெப்பம் 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான வெப்பம் சுட்டெரித்தது.

குறிப்புச் சொற்கள்