பேங்காக்: தாய்லாந்தில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் எம்பாக்ஸ் கிருமியால் 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் காலகட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
எம்பாக்ஸ் நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) எம்பாக்ஸ் தொடர்பான தரவுகளை வெளியிட்ட அத்துறையின் தலைமை இயக்குநர் மொண்டியன் கனசவட்சே, நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும் பரவலைத் தடுப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தார்.
“எம்பாக்ஸ் ஒரு தொற்றுநோயாகும். காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, நெறிக்கட்டுதல் ஆகியவை அதன் தொடக்க அறிகுறிகளாகும். அதன்பின்னர், முகத்திலும் உடலிலும் தடிப்புகளோ கொப்புளங்களோ தோன்றும்,” என்று அவர் கூறினார்.
மேலும், “உடலின் அந்தரங்கப் பகுதிகளில் கொப்புளங்கள் தோன்றினால், மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல நோயாளிகள் வெட்கப்படக் கூடாது. மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளின் தனியுரிமையை மதித்து, முழு ரகசியத்தைக் காப்பார்கள்,” என மொண்டியன் உறுதியளித்தார்.
நோய்த் தொற்றை உறுதிசெய்ய ‘பிசிஆர்’ பரிசோதனை அவசியமாகும். சாதாரண ரத்தப் பரிசோதனைகள் மூலம் எம்பாக்ஸ் தொற்றைக் கண்டறிய இயலாது.
பெரும்பாலான நோயாளிகள் சிறப்புச் சிகிச்சையின்றி, மருத்துவக் கவனிப்பின் மூலமே குணமடைந்து விடுவர். எனினும், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோருக்கு அதிகப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தொற்றுப் பரவலைத் தடுக்க நோயாளிகளுடனான நெருக்கமான தொடர்பைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் ஆடைகள், துண்டுகள் போன்றவற்றை மற்றவர்கள் பகிரக் கூடாது.
மேலும், உலக அளவிலும் எம்பாக்ஸ் பரவல் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
2025 ஜனவரி 1 முதல் 2026 ஆகஸ்ட் 31 வரை 107 நாடுகளில் 68,096 பேர் எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 272 பேர் மாண்டனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
