பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் சனிக்கிழமை நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்; 17 பேர் படுகாயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.
ஜியாங்சு மாநிலத்தின் யிக்ஸிங் நகரில் உள்ள வூக்ஸி கலை, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மாலை நேரம் கத்திக்குத்து நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மாணவருக்கு 21 வயது என்றும் அது தெரிவித்தது.
ஸு என்னும் இணைப்பெயர் கொண்ட அந்த மாணவர் இந்த ஆண்டு பட்டம் பெற இருந்த வேளையில் அதற்கான தேர்வுகளை எழுதத் தவறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
கல்வி நிறுவனத்துக்கு வந்த மாணவர் தமது வெறுப்பைக் காட்டும் வகையில் கத்தியால் குத்தி பலரைக் கொன்றதாகவும் அதனை அந்த மாணவர் ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
காவல்துறையின் விசாரணை தொடருகிறது.
கத்திக்குத்துச் சம்பவம் நடைபெற்ற கல்வி நிறுவனம் ஷாங்காய் நகரில் இருந்து ஏறத்தாழ 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12,000 மாணவர்கள் அங்கு படிப்பதாக அதன் இணையத்தளம் தெரிவிக்கிறது.