கோலாலம்பூர்: 2025/2026 வடகிழக்குப் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில், கிளந்தானில் மொத்தம் 7,792 பணியாளர்கள், 226 மீட்புப் படகுகள், பல்வேறு வகையான 316 தரைவழி வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் மீட்புப் பணிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதை இவை உறுதிசெய்யும்.
துணைப் பிரதமர் டாக்டர் அகமது ஸாஹித் ஹமிடி கூறுகையில், பருவமழைக் காலத்திற்குத் தயாராகும் பொருட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மை குழுவிற்கு 300,000 ரிங்கிட் செயல்பாட்டு நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதிக அபாயம் உள்ள பகுதிகளில் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதற்காக, இயந்திரங்கள், உயிர் காப்பு அங்கிகளுடன் கூடிய 22 மீட்புப் படகுகளைக் கொள்முதல் செய்ய மாநிலக் குழுவிற்கு 330,000 ரிங்கிட் ஒதுக்கியதுடன், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு இரண்டு முழுமையான சம்பவக் கட்டளை மையக் கூடாரத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
“தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நிர்வகிப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு 10,792 மடக்கக்கூடிய கூடாரங்களையும் 9,000 உணவுப் பொட்டலங்களையும் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில், தேவைப்படும்போது கிளந்தான் முழுவதும் பயன்படுத்துவதற்காக 20,500 மறுபயன்பாட்டு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்,” என்று அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறினார்.
தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவரான அஹமது ஸாஹித், வெள்ளத்தால் அணுகல் வழிகள் துண்டிக்கப்படுவதற்கு முன்பு மீட்பு, நிவாரணப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் முக்கியமான சொத்துகள், நிவாரணப் பொருள்களை நிலைநிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றார்.
பணியாளர்களை அனுப்புதல், தன்னார்வப் பயிற்சி, முன்கூட்டியே வெளியேற்றும் வழிமுறைகள் ஆகியவை மாநில, மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மூலமாகவும், சம்பந்தப்பட்ட மீட்பு அமைப்புகள் மூலமாகவும் ஒருங்கிணைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே குடியிருப்பாளர்கள் முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் திறனை வலுப்படுத்துவதற்காக, செப்டம்பர் மாதம் வரை கிளந்தானில் ‘சமூக அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை’ குறித்த எட்டு பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டதாகவும் இதில் 726 பேர் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
