வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுக்கு நெருக்கடி தரும் விதமாகத் திங்கட்கிழமை இரவு (ஏப்ரல் 8) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னர் அதிபர் டிரம்ப் உலக நாடுகள் பலவற்றுக்கு அடிப்படை வரிவிதிப்பை வர்த்தகத்திற்கு ஏற்றவாறு மாற்றினார்.
அதனால் சீன இறக்குமதிகளுக்கு 34 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது.
இதை எதிர்க்கும் விதமாகச் சீனா அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34 விழுக்காடு வரி விதிப்பதாக அறிவித்தது.
இதையடுத்து அதிபர் டிரம்ப், “சீனா, அமெரிக்கப் பொருள்களுக்கு 34 விழுக்காடு வரி விதித்தால் அதன் இறக்குமதிக்குக் கூடுதலாக 50 விழுக்காடு வரி விதிக்கப்படும்,” என்று மிரட்டியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சீன இறக்குமதிகளுக்கு டிரம்ப் 20 விழுக்காடு வரி விதித்தார். கடந்த வாரம் 34 விழுக்காடு வரி கூட்டப்பட்டது. தற்போது கூடுதலாக 50 விழுக்காடு வரி எனச் சீன இறக்குமதிகளுக்கான வரி 104 விழுக்காட்விழுக்காட்டை எட்டக்கூடும் என்று வெள்ளை மாளிகை ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
சீனா அதன் முடிவை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கூடுதல் வரி புதன்கிழமை (ஏப்ரல் 9) முதல் நடப்புக்கு வரும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் வரி விதிப்பது என்பது வர்த்தகப் போருக்கு இட்டுச்செல்லும் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீனா பதிலடி
இந்நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையை அச்சுறுத்தல் என்று சீனா சாடியுள்ளது.
“அமெரிக்கா சீனாமீது வரிக்கு மேல் வரி விதித்து தவற்றுக்கு மேல் தவறு செய்கிறது. இது வாஷிங்டனின் மிரட்டல் தன்மையைக் காட்டுகிறது,” என்று சீனாவின் வர்த்தக அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனா கடைசி வரை போராடும். அமெரிக்கா வரியை அதிகரித்தால் சீனாவும் பதில் நடவடிக்கை எடுக்கும். சீனா அதன் உரிமையை விட்டுக்கொடுக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே அதிகரித்து வரும் வார்த்தைப் போரில், செவ்வாய்க்கிழமையன்று சீன வெளியுறவு அமைச்சு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்சின் “அறியாமை மற்றும் நாகரீகமற்ற” கருத்துகளைக் கண்டித்தது. அதில் அமெரிக்கா, “சீன விவசாயிகளிடமிருந்து” நீண்ட காலமாக கடன் வாங்கியதாக அவர் சாடினார்.
அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. பில்லியன் கணக்கில் நிதிகள் காணாமல் போயின. அதிபர் டிரம்ப்பின் செயல்களை அவரது கட்சியினரே விமர்சித்து வருகின்றனர்.

