பேங்காக்: வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், உடனடியாகப் பள்ளிகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடும் அதிகாரத்தை நாடு முழுவதும் உள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு தாய்லாந்தின் கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
பேரிடர் நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கும் ஆற்றலை இந்த நடவடிக்கை வழங்குகிறது.
மாணவர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் வகையிலும், வேகமாக மாறிவரும் வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப பள்ளிகள் விரைவாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் துணைச் செய்தித் தொடர்பாளர் கேப்டன் பதராஸ்மி தோங்சலுவாய்கார்ன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தெரிவித்தார்.
புதிய நடவடிக்கைகளின்கீழ், பள்ளிகள் களத்தில் உள்ள அபாயங்களை மதிப்பிட வேண்டும்; அத்துடன், ‘லைன்’ (Line) செயலி மூலம் வெள்ள நிலைமைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் சமூகங்களுக்கும் தேவையான நிவாரணப் பைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த இந்த அறிக்கை அமைப்பு பயன்படுத்தப்படும்.
நெருக்கடியின்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் வீட்டுப்பாடங்களையும் தேர்வு நடைமுறைகளையும் தளர்த்துமாறும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் அருகிலுள்ள சமூகங்களுக்குத் தற்காலிக வெளியேற்ற மையங்களாக செயல்படக்கூடிய பாதுகாப்பான பகுதிகளைத் தயார் செய்யுமாறும் அமைச்சு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நிலைமை சீரடைந்ததும், பள்ளிகள் விரைவாக மாற்றுத் தேர்வுத் திட்டங்களைத் தயார் செய்ய வேண்டும். கற்றலுக்கான உதவிப் பொருள்களை வழங்குவதுடன், சேதமடைந்த கட்டடங்களைப் பழுதுபார்க்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளிக் கட்டடங்கள், வசதிகள் ஆகியவற்றைப் பழுதுபார்க்க உதவத் தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்புமாறு சமூகங்களுக்கான தொழிற்கல்வி பழுதுபார்க்கும் மையங்கள் கேட்டுக்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் தரவுகள், பேரிடர்களால் பள்ளிகளுக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான பாதிப்புகளைக் காட்டுகின்றன. குறிப்பாக 2025ல், கிட்டத்தட்ட 2,000 பள்ளிகளும் 160,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

