தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

11 மாதங்களாகப் போர்; காஸாவில் புதிய அச்சுறுத்தலாக இளம்பிள்ளை வாதம்

2 mins read
0a360a05-bd83-4368-99b9-46f02097701d
கடந்த 11 மாதங்களாக தொடர் குண்டுவீச்சால் ஒவ்வொரு இடமாக மாறிக் கொண்டிருந்த காஸா பகுதி மக்களை புதிதாக இளம்பிள்ளை வாதம் துரத்தி வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: மனிதர்கள் எத்தனை காலம் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொண்டுள்ளனரோ அவ்வளவு காலம் நோயும் கூடவே பின்னிப் பிணைந்து அவர்களை துரத்தி வந்துள்ளது.

இதை வெளிப்படுத்துவதுபோல், காஸாவில் 11 மாதப் போரில் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கப்படும் நிலையில், மக்கள் ஒவ்வொரு இடமாக தஞ்சமடைய வேண்டிய நிலையில், தற்பொழுது அவர்களை இளம்பிள்ளை வாதமும் துரத்தி வருகிறது.

இந்த நோய் பெரிய அளவில் பரவும் என்பதை உணர்ந்து அனைத்துலக நாடுகள் தந்த நெருக்குதலில் இஸ்ரேல் அதிகாரிகள் தடுப்பூசி போட வசதியாக ஆங்காங்கே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஐநா அங்குள்ள 640,000 பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட எற்பாடு செய்து வருகிறது.

இந்தப் போரில் ஈடுபட்டுள்ள ஹமாஸ், இஸ்ரேல் இரு தரப்பினரும் இதுவரை பெரிதாக எந்தவித உடன்பாடும் காணவில்லை. எனினும், தற்பொழுது ஹமாஸ் போராளி இயக்கமும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல், கட்டங் கட்டமாகத் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளது.

ஆனால் இந்த தடுப்பூசி போடும் திட்டம் நிறைவேறுவதில் ஏராளமான சவால்கள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். காஸாவின் பெரும்பகுதி கட்டமைப்பு, இடிபாடுகளாக இருக்கிறது.

பல நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிப் பொருள்கள் விநியோகிப்பவர்கள் தாக்கப்படுகின்றனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

காஸா பகுதியிலுள்ள கழிவு நீரில் இளம்பிள்ளை வாதக் கிருமி அறிகுறி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் ஆறு வாரங்களுக்கு முன் கூறியது.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி திட்ட ஏற்பாடுக்கு பின் போராளிகளுக்கு இடையேயான இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் காஸாவில் ஒரு வயதுப் பையன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் இளம்பிள்ளை வாத நோய் ஒருவருக்கு கண்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இது முடக்குவாதம், பின்னர் மரணம் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதால் பரவலான தடுப்பூசித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்