சோல்: தென்கொரியாவில் 2026ஆம் ஆண்டுக்கான வரி கணக்காளர் தகுதித் தேர்வில் முதலிடம் பிடித்தவர் காவல் துறையிடம் சரணடைந்தார்.
அவர் தேர்வில் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார்.
34 வயதான ஹான் வொன்-சோக், நவம்பர் 15ஆம் தேதி யூடியூப் தளத்தில் காணொளி வெளியிட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சிறிய கேமரா மூலம் தேர்வுத் தாள்களைப் புகைப்படம் எடுத்து, ஏஐ கருவிக்கு அனுப்பி, கைப்பேசியில் விடைகளைப் பார்த்ததாக அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுக் கணக்காளர் தேர்வின் முதல் சுற்றிலும் இதே முறையில் மோசடி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் ஏப்ரல் மாதம் நடந்த தேர்வின் முதல் சுற்றில் 160 கேள்விகளில் 159க்குச் சரியான விடையளித்து 400க்கு 397.5 புள்ளிகளை அவர் பெற்றிருந்தார்.
நான்கு பாடங்களில் மூன்றில் முழு மதிப்பெண்களையும் பொது நிதியியலில் 97.5 புள்ளிகளையும் அவர் பெற்றார்.
அறிமுக வரிச் சட்டம் என்ற பாடத்தில் அவர் முழு மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை எழுப்பியது.
16,856 பேர் எழுதிய அந்தப் பாடத்தில் சராசரியாக 30.18 புள்ளிகள் மட்டுமே மாணவர்கள் பெற்றனர்.
இரண்டாம் சுற்றுத் தேர்விலும் 100க்கு 82.87 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார். கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் உள்ள தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் சக மாணவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததை அடுத்து ஹானின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
