வாஷிங்டன்: சீனாவுக்குச் செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை அமெரிக்கா அதன் ‘என்விடியா’ (Nvidia) நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
அதனை திங்கட்கிழமை (டிசம்பர் 8) அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவற்றின் விற்பனையில் 25 விழுக்காடு தொகையை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களின் தரவரிசையில் என்விடியா ஹெச்200 (Nvidia’s H200) வகை சில்லுகள் இரண்டாம் நிலையில் உள்ளன.
உலக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு அவற்றின் ஏற்றுமதிகளை மேற்கொண்டால் எதிர்காலத்தில் பின்தங்கிவிடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் அந்நாட்டில் சிலகாலமாக தொடர்ந்து வருகிறது.
அதிபரின் இந்த முடிவு அதற்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. இருப்பினும் சீனா ஏற்கெனவே அதன் நிறுவனங்களை அமெரிக்க தொழில்நுட்பத்தைத் தவிர்க்கும்படி அறிவுரைத்திருப்பதும் கவனத்துக்குரியது. எனவே சீனாவுக்கு ஏஐ சில்லுகளின் ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்படுவது அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் என்பது கேள்விக்குறியாகும்.
அதிபர் டிரம்ப், அவரது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் இதனைப் பதிவிட்ட சிலமணி நேரத்தில், என்விடியா நிறுவனப் பங்குகளின் விலை பங்குச் சந்தையில் 2 முதல் 3 விழுக்காடு உயர்ந்தன.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் இதன் விவரத்தைத் தெரிவித்தவுடன் அவர் நேர்மறையாகப் பதிலளித்தார் என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தார். இருப்பினும் என்விடியாவின் ஏஐ சில்லுகள் சீன அரசாங்கத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வர்த்தகத் துறை, அதன் விவரங்களை முடிவுசெய்து வருகிறது எனவும், மற்ற ஏஐ நிறுவனங்களான அட்வான்ஸ் மைக்ரோ டிவைசஸ் (AMD), இன்டெல் (Intel) ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும் என்றும் திரு டிரம்ப் கூறியுள்ளார்.

