மலேசிய விமான நிலையத்தில் $15.5 மில்லியன் மதிப்புள்ள ‘ஏஐ’ சில்லுகள் பறிமுதல்

மலேசிய விமான நிலையத்தில் $15.5 மில்லியன் மதிப்புள்ள ‘ஏஐ’ சில்லுகள் பறிமுதல்

படம்: இபிஏ

28 Oct 2026 - 6:01 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய விமான நிலையத்தில் இம்மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 49.5 மில்லியன் ரிங்கிட் (S$15.5 மில்லியன்) மதிப்புள்ள மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சில்லுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசியாவின் முக்கியமான விமான நிலையம் வழியாக உயர் செயல்திறன் கொண்ட பகுதி மின்கடத்திகளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கும்பலை அதிகாரிகள் நெருங்கி வருகின்றனர் எனவும் அந்நாட்டு சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தியாகும் மேம்பட்ட ‘ஏஐ’ சில்லுகள் சீனாவிற்குள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று வா‌ஷிங்டன் அதன் பங்காளி நாடுகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

அதன் காரணமாக அமெரிக்காவின் ஏஐ சில்லுகளுக்கு மலேசியா ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது.

அக்டோபர் 15ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் தடையற்ற வர்த்தக மண்டலத்தில் நடந்த சோதனையின்போது, மேம்பட்ட ஏஐ சில்லுகள் அடங்கிய 30 இணையச் சேவையகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலையச் சுங்கத்துறை இயக்குநர் அஸ்பாலிலா அக் துவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“ஓர் ஆசிய நாட்டிலிருந்து வந்த அந்தச் சில்லுகள், அதே கண்டத்தில் உள்ள மற்றொரு நாட்டிற்கு மறுஏற்றுமதி செய்யப்படவிருந்தது. இதற்கு வர்த்தக அனுமதி தேவை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

மறுஏற்றுமதியின்போது கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, அந்தச் சில்லுகள் மின்னணு உதிரிப்பாகங்கள் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டு மலேசியா வழியாக அனுப்பப்பட்டன என்று அஸ்பாலிலா குறிப்பிட்டார்.

இச்சரக்குப் போக்குவரத்திற்கு உதவிய மலேசிய நிறுவனம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் முறியடிக்கப்பட்ட இதேபோன்ற கடத்தல் முயற்சிக்குக் காரணமான கும்பலே இதிலும் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்