ஏஐ சுகாதார வழிகாட்டி: கூகல், என்எச்ஜி ஹெல்த் கூட்டணி

ஏஐ சுகாதார வழிகாட்டி: கூகல், என்எச்ஜி ஹெல்த் கூட்டணி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Oct 2026 - 7:31 pm

2 mins read

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் செயல்படும் புதிய சுகாதார வழிகாட்டியை உருவாக்கக் கூகல் நிறுவனமும் என்எச்ஜி ஹெல்த்தும் இணைந்துள்ளன.

இந்த வழிகாட்டி பயனர்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கைமுறை ஆலோசனைகளையும் தடுப்புப் பராமரிப்பு நினைவூட்டல்களையும் வழங்கும்.

வாட்ஸ்அப் தளத்தில் செயல்படும் என்எச்ஜி ஹெல்த்பாட் வழியாக இந்தச் சேவை கிடைக்கும். கூகல் மேப்ஸ் போன்ற சேவைகளைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான உணவுகளையும் உடற்பயிற்சி செய்ய ஏற்ற இடங்களையும் இது பரிந்துரைக்கும்.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) மேப்பள்ட்ரீ பிசினஸ் சிட்டியில் நடைபெற்ற ‘கூகல் ஃபார் ஹெல்த்’ மாநாட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு இந்தச் சேவை வழங்கப்படும். இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாகும்.

ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்திற்குத் தகுதிபெற்றும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யாதவர்கள் இக்குழுவில் அடங்குவர்.

மேலும், முதியவர்களுக்கான பலவீனப் பரிசோதனைகளையும் உணவு, உடற்பயிற்சி ஆலோசனைகளையும் இந்த வழிகாட்டி வழங்கும்.

இந்தச் சேவை நான்கு தேசிய மொழிகளிலும் கிடைக்கும். குரல் பதிவு மூலமாகவும் பயனர்கள் தகவல்களைப் பெறலாம். ஆரம்பத்தில் சில ஆயிரம் பேர் அக்கம் பக்கத்து வட்டாரங்களிலிருந்து சேர்க்கப்படுவார்கள்.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் ஹெல்த்ஹப் தளத்தின் மூலம் நாடு முழுவதும் இதனை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கூகல், என்எச்ஜி ஹெல்த் தரவுகளைப் பயன்படுத்தி, நாட்பட்ட நோய்கள், பலவீனங்களை முன்கூட்டியே கணிக்க இந்த வழிகாட்டி உதவும்.

உடல்நலப் பிரச்சினைகள் பெரிதாவதற்கு முன்பே மக்களைச் சென்றடைய ஏஐ வழிகாட்டி பெரிதும் உதவும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியெட் ஹவ் கூறினார்.

தரவுகள் மூலமாக ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு சிறந்த சுகாதார முடிவுகளை அடைய முடியும் என்று என்எச்ஜி ஹெல்த் தலைமை நிர்வாகி ஜோ சிம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்