தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கரையோரப் பகுதிகளிலிருந்து 250,000 பேரை வெளியேற்றத் திட்டம்

வியட்னாமில் சூறாவளி அச்சுறுத்தலால் விமான நிலையங்கள் மூடல்

1 mins read
eb24d6a9-8182-4cbb-9f9d-6a37cc93cce5
பிலிப்பீன்சில் பூவாலோய் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மக்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தற்காலிகப் படகுகளில் தெருக்களைக் கடந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: பூவாலோய் சூறாவளி தீவிரமடைந்துவரும் நிலையில் வியட்னாம் அதன் விமான நிலையங்களை மூடியிருக்கிறது.

கரையோரப் பகுதிகளிலிருந்து 250,000 பேரை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) வெளியேற்ற அது திட்டமிடுகிறது.

பூவாலோய் சூறாவளியால் பிலிப்பீன்சில் பரவலாக வெள்ளம் ஏற்பட்டதில் 10 பேர் மாண்டனர்.

சூறாவளி தற்போது மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு அது கரையைக் கடக்கும் என்று வியட்னாமின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. வேகமாக நகரும் சூறாவளியால் கனத்த மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் நேரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே வியட்னாமின் ஹுவே, குவாங் சீ நகரங்களில் பெருமழையால் வெள்ளம் உண்டானது.

மத்திய வியட்னாமின் ஆகப் பெரிய நகரமான டா நாங், 210,000 குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிடுவதாக அரசாங்க ஊடகம் குறிப்பிட்டது. கரையோர நகரமான ஹுவேயிலிருந்து 32,000 பேரை வேறு இடங்களுக்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஹா டின் நகரில் 15,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கும் மருத்துவ நிலையங்களுக்கும் அனுப்பப்படவிருக்கின்றனர்.

நிலைமையைச் சமாளிக்கக் கிட்டத்தட்ட 117,000 ராணுவத்தினர் திரட்டப்பட்டுள்ளனர். துறைமுகத்துக்குத் திரும்புமாறு மீன்பிடிப் படகுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்