பெய்ஜிங்: சீனாவில் பிரசவத்தின்போது அனைத்து மூன்றாம் நிலை, நிபுணத்துவ சிகிச்சை மருத்துவமனைகளும் ஆண்டிறுதிக்குள் பெண்களுக்கு ‘எபிடியூரல்’ மயக்க மருந்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐந்நூற்றுக்கும் அதிக படுக்கைகளைக் கொண்ட மூன்றாம் நிலை, நிபுணத்துவ சிகிச்சை மருத்துவமனை ஆண்டிறுதிக்குள் ‘எபிடியூரல்’ மருந்தை வழங்க வேண்டும் என்று சீனாவின் தேசியச் சுகாதார ஆணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட இரண்டாம் நிலை நிபுணத்துவ சிகிச்சை மருத்துவமனைகள் 2027க்குள் இச்சேவையை வழங்க வேண்டும் என்று ஆணையம் கூறியது.
சீனாவின் மக்கள்தொகை 2024ல் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிந்த வேளையில், அந்நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.
சீனாவில் ஏறக்குறைய 30 விழுக்காட்டுக் கர்ப்பிணிகள் பிரசவ வலியிலிருந்து நிவாரணம் பெற மயக்க மருந்தைப் பெறுகின்றனர்.
ஒப்புநோக்க, வளர்ச்சியடைந்த சில நாடுகளில் இந்த விகிதம் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதாக ‘சைனா டெய்லி’ ஊடகம் கூறியது.
இந்நிலையில், ‘எபிடியூரல்’ மருந்து வழங்கப்படுவதற்கான இந்த ஏற்பாடு பிரசவத்தின்போது பெண்களுக்கு வலியில்லாத, வசதியான சூழலை ஏற்படுத்தித் தரும் என்று ஆணையம் சொன்னது.