சியேட்டல்: இணைய வர்த்தகத் தளமான அமேசான்.காம், அதன் தளவாடச் சேவைகளைப் பயன்படுத்தாத வர்த்தகர்கள்மீது புதிய கட்டணத்தை விதிக்கிறது.
அமெரிக்க அரசாங்கம் அமேசான் நிறுவனத்தின்மீது நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைக்கு எதிரான வழக்கைத் தொடுக்கவிருக்கும் நிலையில், விற்பனையாளர்கள் பலர் இந்த மாற்றம் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனக் கருதுகின்றனர்.
அக்டோபர் மாதத்தில் அமேசான் தளவாடச் சேவையைப் பயன்படுத்தாத விற்பனையாளர்கள் ஒவ்வொரு விற்பனைக்கும் 2 விழுக்காட்டுக் கட்டணம் செலுத்தவேண்டும். புளூம்பெர்க் செய்தி நிறுவனம் பார்வையிட்ட ஆவணங்களில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
விற்பனையாளர்கள் தங்கள் பொருள்களை அமேசான் இணையத்தளம் மூலம் விற்பதற்கு ஏற்கெனவே 15 விழுக்காட்டுக் கட்டணம் செலுத்துகின்றனர். அதற்குமேல் புதிய 2 விழுக்காட்டுக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதை அவர்கள் சுட்டினர்.
புதிய கட்டணம், அமேசானின் தளவாடச் சேவைகளைப் பயன்படுத்த தங்களுக்கு நெருக்குதல் கொடுப்பதற்கான முயற்சி என்று சில விற்பனையாளர்கள் கூறினர்.
அந்தக் கட்டணத்திற்கான தேவை பற்றி, நிறுவனம் விற்பனையாளர்களுக்கு விளக்கம் தரவில்லை. ஆனால் தனிப்பட்ட உள்கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்கான செலவை அக்கட்டணம் ஈடுகட்டும் என்று புளூம்பெர்க்கிடம் அமேசான் கூறியது.

