மியாமி: நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மியாமியில் நடந்த முதலீட்டாளர் கருத்தரங்கில் பேசிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவரின் அக்கருத்து, அட்லாண்டி நாடுகளுடனான தற்காப்பு ஒப்பந்தம் தொடர்பிலான திரு டிரம்ப்பின் கடப்பாடுமீது கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
ஈரான்மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், நேட்டோ நாடுகள் அமெரிக்காவிற்குத் தேவையான தளவாட உதவிகளை வழங்க மறுத்திருப்பதால் தாம் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் திரு டிரம்ப் கூறியுள்ளார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஈரான்மீது தாக்குதல் நடத்தும் முடிவை எடுத்தபோது, தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா கலந்தாலோசிக்கவில்லை என்பதும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள் பலர் இந்த ராணுவ நடவடிக்கையை எதிர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“நாம் எப்போதும் நேட்டோ நாடுகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம். ஆனால், தற்போது அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, நாம் ஏன் அவர்களுக்காகத் துணையாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு அவசியம் இல்லை என நான் கருதுகிறேன்,” என்றார் கருத்தரங்கில் உரையாற்றிய டிரம்ப்.
“நேட்டோ கூட்டமைப்புடனான அதிபரின் உறவு ஒருமுறை இணக்கமாகவும் மறுமுறை விரிசலுடனும் என நிலையற்ற நிலையிலேயே இருந்து வந்துள்ளது.
உறுப்பு நாட்டின்மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்ற நேட்டோவின் விதியை அவர் பின்பற்றுவாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
அதை உறுதிசெய்யும் வகையில், பல்வேறு தருணங்களில் அவர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

