சென்னை: ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழகத்தின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அண்மையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவரைக் காவல்துறையின்கீழ் விசாரணை நடத்துவதற்கான மனுவை அத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
அதனை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) விசாரித்த ஊழல் தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை நவம்பர் 2ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இவ்வாண்டு மே மாத மாநிலப் பொதுத்தேர்தல் வரையில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது.
அப்போது 1,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற பல்வேறு சட்டபூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை சட்டவிரோதமாக பள்ளிக்கல்வித் துறையால் பெறப்பட்டதாக தனியார் பள்ளிகள் சங்கம் குற்றஞ்சாட்டியதோடு அதுகுறித்து புகாரும் அளித்திருந்தது.
அப்புகாரை விசாரித்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட வேறு நபர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்தனர். பிறகு அதிரடியாக கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 26) முன்னாள் அமைச்சரைக் கைதும் செய்தனர்.
கைது நடவடிக்கைக்குப் பிறகு அவரை 5 நாள்கள் விசாரணை நடத்த தமிழ்நாட்டின் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புழல் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் பலத்த பாதுகாப்புடன் சிறப்பு நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது அன்பில் மகேஸ் தரப்பு வழக்கறிஞர்கள், முதல் வகுப்புச் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சருக்கு அப்பிரிவுக்கான உணவு வகைகள் வழங்கப்படவில்லை எனவும் அதனால் அவருக்கு வீட்டில் இருந்து உணவு வழங்க அனுமதி கோரினர்.
உணவுப் பிரச்சினையால் அவரது எடை குறைந்துவிட்டதாகவும் அவர்கள் முறையிட்டனர். சிறையில் இரவு நேரத்தில் விளக்கு அணைக்கப்படாமல் அவர் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்கள் வாதாடினர்.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தீர்ப்புக்கான தேதியை ஒத்திவைத்தார். தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
