ஜாலான் மஸ்ஜித் இந்தியா நடமாட்டத்துக்கு பாதுகாப்பானது என அறிவிப்பு

2 mins read
b31bc62a-f31a-4377-b164-2fa4fb159262
ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆழ்குழிக்குள் பெண் ஒருவர் விழுந்தது தனிப்பட்ட ஒரு சம்பவம் என பணிக்குழு தெரிவித்தது. - கோப்புப் படம்: ஊடகம்

கோலாலம்பூர்: ஆழ்குழியில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விழுந்த சம்பவத்திற்குப் பிறகு மஸ்ஜித் இந்தியா வட்டாரமும் அங்குள்ள கட்டடங்களும் மக்கள் நடமாட்டத்துக்குப் பாதுகாப்பானவை என்று கோலாலம்பூர் நகரமன்றம் தெரிவித்து உள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர் உள்ள நிலைமையை ஆராய பணிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. அதற்குப் பின்னர் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஆழ்குழிக்குள் பெண் விழுந்தது தனிப்பட்ட ஒரு சம்பவம் என்று அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகள் தெரிவித்ததாக அறிக்கை கூறியது.

“தற்போதைய புவியியல் தகவல் மற்றும் நிலப்பகுதி தொடர்பான விசாரணை ஆவணங்களின்படி சம்பவம் நிகழ்ந்த பகுதி கென்னி மலைப் பகுதியைச் சேர்ந்தது. பொதுவாக அந்த வட்டாரம் பல்வேறு பாறை அடுக்குகளைக் கொண்டிருக்கும்,” என்று நகரமன்றத்தின் அறிக்கை தெளிவுபடுத்தியது.

பணிக்குழுக் கூட்டத்திற்கு நகரமன்ற திட்ட மேலாண்மை நிர்வாக இயக்குர் முகம்மது ஹமிம் தலைமை ஏற்றார். சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளும் தாங்கள் கண்டறிந்தவற்றை அந்தக் கூட்டத்தில் அறிக்கையாகச் சமர்ப்பித்தன.

பொதுப்பணித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கனிம மற்றும் புவி அறிவியல் துறை உள்ளிட்ட எட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அறிக்கைகளின் அடிப்படையில், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம் என்று மன்றம் கூறியது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி 8 மீட்டர் ஆழத்துக்கு திடீரென நிலம் உள்வாங்கியதில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜி.விஜயலட்சுமி என்பவர் குழிக்குள் விழுந்து காணாமல் போனார்.

அவரைத் தேடி மீட்க 9 நாள்களாகக் கடுமையாகப் போராடியும் பலன் கிடைக்காததால், மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தேடல் பணிகள் நிறுத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்